என் படத்தில் நீ நாயகன் என்ற போது வாழ்க்கை மாறியது! வசந்த் ரவி!

சினி நியூஸ் சினிமா
vasanth ravi - 2026

தரமணி படத்தின் மூலம் அறிமுகமானவர் வசந்த் ரவி. தற்போது ராக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டருக்கு படித்த அவர் நடிகர் ஆனது பற்றி கூறியதாவது:

சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னை. ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது.

ஆனால், எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய் என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம் கேர் நடிப்பு பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன்.

ஆனால், பெற்றோர்கள் மருத்துவம் மட்டும் போதாது மருத்துவ மேற்படிப்பும் படிக்க வேண்டும் என்றதும், மருத்துவமே படித்தால் அந்த துறையிலிருந்து வர முடியாது என்ற காரணத்தால் மருத்துவம் சார்ந்து ஹெல்த் கேர் மேனேஜ்மேண்ட் படித்தேன்.

சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது இயங்குநர் ராமை சந்தித்து வந்தேன். ஒரு நாள் ஆடிசன் செய்தார்.

என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நாயகன் என்றார். அந்த தருணத்தில் என் வாழ்க்கை மாறிவிட்டது. தரமணி வெற்றியடைந்தது. அதன் பிறகு 40க்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டும் தரமணி படத்திற்கு இணையாக இருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தேன்.

அப்படி நான் எதிர்பார்த்தது போல் அமைந்தது ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் பழி வாங்கக் கூடிய கேங்ஸ்டர் பின்னணி கொண்ட படம். பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும்.இவ்வாறு நடிகர் வசந்த் ரவி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.