spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதலையங்கம்குழுவாக…கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

குழுவாக…கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

IMG 20240630 WA0000

பரபரப்பான வகையில் நடந்து முடிந்திருக்கிறது இந்த 2024ம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடர். இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 176-7 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய தென்னாபிரிக்கா திரில் ஆட்டத்தில் 169-8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று உலகக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றியின் பின்னே தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட சாதனைகள் என்று இல்லாமல், ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி இருக்கிறது என்பது உண்மையில் பெருமிதம் கொள்ளத்தக்க விஷயம்! இது போன்று குழுவாக கூட்டு முயற்சியில் கடினமாக உழைத்தால் எந்த வெற்றியும் சாத்தியமே என்பதை நிரூபித்த ஒரு போட்டியாக இந்தத் தொடரின் இறுதிப்போட்டி அமைந்தது! அதிலும் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வெற்றி பெறுவது என்பதெல்லாம் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடிய சங்கதி!  அதை இந்திய அணி செய்து காட்டி இருக்கிறது! இதுவே உலகத்துக்கு இந்திய அணி அளித்த உன்னதமான செய்தி! 

இந்த இறுதிப் போட்டியில், தங்கள் பொறுப்புணர்ந்து கூட்டாக எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடியது அணிக்கு பெரிய அளவில் உதவியது. கடைசி 5 ஓவர்களில், உயிரைக் கொடுத்து, வெற்றியை எதிரணியின் பக்கம் சிறிதும் விட்டுக்கொடுக்காமல், ஆடியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

கோலி பேட்டிங், ரோஹித் கேப்டன்சி, பும்ரா, அர்ஷிதீப், அக்சர், பாண்ட்யா பவுலிங், சூர்யகுமார் யாதவ் பீல்டிங் என்று, அனைத்து துறையிலும் ஒவ்வொரு வீரர்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக இந்திய அணி வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 9 ரன், பண்ட் டக் அவுட், அதிரடி காட்டும் சூரிய குமார் 3 ரன்னில் அவுட் என அதிர்ச்சி கொடுக்க, பெரிதும் எதிர்பார்க்கப்படாத கோலியும் அக்சர் படேலும் நம்பிக்கை கொடுத்தார்கள்.

ரோஹித் சர்மா இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான அவரது பேயாட்டத்தைக் கண்டவர்கள், அவர் இறுதிப் போட்டியில் 9 ரன்னில் மூட்டை கட்டியபோது, நம்பிக்கை இழந்துதான் போனார்கள். ஆனால் தொடர் முழுக்க இரட்டை இலக்க எண்ணைத் தாண்டாத விராட் கோலி, இறுதிப் போட்டியில் அணிக்கு நம்பிக்கை அளித்தார். எனினும், 3 விக்கெட் விரைவாக விழுந்துவிட்டதால் விரைவாக ரன் சேர்ப்பதில் ஈடுபடாமல் பொறுமையாக, மெதுவாக ஆடி 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே நேரம், அக்சர் படேல் 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 47 ரன் எடுத்து அசத்தினார்.

50 ரன்களைக் கடந்த பின், திடீரென வேகம் காட்டிய கோலி, 59 பந்தில் 76 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். என்றாலும்,  ஒரு பேட்டிங் பிட்சில் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இன்னும் கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்து, 200க்குப் பக்கத்தில் ஸ்கோரை நிறுத்தியிருக்க வேண்டிய நிலையில், ஷிவம் துபே கடைசி நேரத்தில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து, 176க்கு 7 விக்கெட்கள் என்ற ஸ்கோரில் நிறுத்தினார்கள். இந்திய அணி கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருந்தால், அடுத்து பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கும்.  காரணம், அது பேட்டிங் பிட்ச். ஆனால் இந்திய அணி ஸ்லோ பிட்ச் போல் ஆடியது என்றே சொல்லலாம்! அதனால் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு, இந்த பிட்சில் எடுபடாமல் போய், அதிக ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று!

இந்த நிலையை உணர்ந்துதான் தென்னாப்பிரிக்க வீரர்களும் விளையாடினார்கள். தொடக்கத்தில் அந்த அணியின் ஹென்றிக்ஸ், மார்க்கரம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டி காக், ஸ்டப்ஸ் இணைந்து சிறப்பாக ஆடினர். ஸ்டப்ஸ் 31 ரன், டி காக் 39 ரன் என எடுத்து வலுவான நிலைக்குக் கொண்டு செல்ல, தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பாதையில் சென்றது. குறிப்பாக, நேரத்தின் தேவை அறிந்து 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன் சேர்த்து கெல்சன் அதிரடி ஆட்டம் ஆட, தென்னாப்பிரிக்க அணி நிச்சயம் வென்று விடும், அதுவும், போட்டி முடிவதற்கு 2 ஓவர் முன்பாகவே வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டு வந்தது.  

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையுடன் தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த வெறித்தனமான ரசிகர்கள் பலர்  டிவியை அணைத்துவிட்டு  உறக்கத்துக்கு சென்று விட்டதை  பலரின் சமூக வலைதள பதிவுகள் மூலம் உணர முடிந்தது.  ஆனால் முதலை வாயில் அகப்பட்ட இரையை தட்டிப்பறித்துக் கொண்டு வந்தது போல் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது என்பதுதான் இந்த ஆட்டத்தின் சிறப்பு!

15 ஓவர்களின் முடிவில், அதாவது 90 பந்துகளில் 146 என்று இருந்து, 30 பந்துகளில் வெறும் 30 ரன் எடுத்தால் போதும் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்க அணி. அந்த நேரத்தில்தான் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எடுத்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. வேறு கேப்டன்களாக இருந்தால் நன்றாக பவுலிங் செய்து எதிரணிக்கு பயத்தை காட்டக்கூடிய பூம்ராவை 18, 20 ஓவர்களில் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் 16-வது ஓவரிலேயே பூம்ராவைக் கொண்டு வந்து தனது கேப்டன்சியை நிரூபித்தார் ரோஹித். அவ்வளவு நேரம் அதிரடி காட்டிய கிளாஸனை கட்டுப்படுத்தும் விதமாக அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து பூம்ரா சிறப்பாக செய்தார்! அதனால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்துக்கு  கிளாஸன் தள்ளப்பட்டார். எனவே தான் சந்தித்த பதினேழாவது ஓவரின் முதல் பந்தில் தூக்கி அடிக்க ஆசைப்பட்டு,  சாதாரண அவுட் சைடு பந்தாக இருந்தாலும் அதை தொட்டு ஆட்டம் இழந்தார் க்லாஸன். இது ஆட்டத்தின் ஒரு திருப்புமுனை ஆனது. 

அதன்பின் ஜான்சனை பும்ரா பதம் பார்க்க, கடைசி ஓவர்கள் ரன்கள் எடுக்க இயலாத படி, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள் இந்திய அணியின் ஃபீல்டர்கள். மிகச் சிறப்பான பீல்டிங் வியூகமும் அணியின் ஒருங்கிணைப்பும் கைகொடுக்க, கடைசி ஓவரில் 16 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தென்னாப்பிரிக்க அணியைக் கொண்டு வந்தார்கள்! அதாவது மூன்று ஓவர்களில் வெறும் 10 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு பந்துகளில் 16 ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினார்கள்  அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்.

எனவேதான் ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரன் சேர்க்க வேண்டிய சூழலில்  சூரியகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்த  கேட்ச் மூலம் மில்லர் ஆட்டமிழந்தார்.  அது மட்டும் ஆறு ரன்கள் என்று ஆகி இருந்தால் அடுத்த ஐந்து பந்துகளில் எளிதாக 10 ரன்கள் சேர்த்திருக்க கூடும்.  காரணம் பாண்டியாவின் பந்தினை அதுவரை நன்றாகவே அனைவரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மில்லர் ஆட்டமிழந்தது அடுத்த திருப்புமுனை. அதன் பின் மேலும் ரன்கள் போகாமல் கூடுதலாக ஒரு விக்கெட் எடுத்து தென்னாப்பிரிக்க அணியின் கடைசி வரிசை ஆட்டக்காரர்களை கட்டுப்படுத்தினார்கள் இந்திய அணியினர்.  இத்தகைய கூட்டு முயற்சியும்  வெற்றியின் மீது நம்பிக்கை இழக்காத போராட்ட குணமும் தன்னம்பிக்கையும் தான் அணிக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்த தோல்வியை உடைத்து இந்திய அணி சாதனை படைத்தது.

இதில், தென்னாப்பிரிக்க அணியின் திறமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த அணி, முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம், கடினமாகப் போராடிய தங்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் அவர் வருங்காலத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறிய வார்த்தைகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

 “இது வெற்றியை நெருங்கிய ஒரு படி. இதுபோன்ற பெரிய கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வது எளிதல்ல. அதில் கோப்பையை வென்ற இந்தியா போன்ற அணிக்கு நீங்கள் தலை வணங்க வேண்டும். ஏனெனில் அதில் கடினமான உழைப்பு இருக்கும். 

“நாங்களும் வெற்றியை ஒரு படி நெருங்கியுள்ளோம். கண்டிப்பாக வருங்காலங்களில் நாங்கள் முன்னோக்கிச் சென்று அந்த முதல் வெற்றியைப் பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் இம்முறை தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்துள்ளேன். ஒரு அணியாக நன்றாக விளையாடி வந்த நாங்கள் தோல்வியை சந்தித்ததால் அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் தேவைப்படும். இருப்பினும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஏற்கனவே சொன்னது போல் இது கொஞ்சம் வலிக்கிறது.

“எங்கள் வீரர்கள் மற்றும் அணிக்காக பெருமைப்படுகிறேன். எங்களுடைய பௌலர்கள் நன்றாகப் பந்து வீசினர். அதே போல பிட்ச்சில் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் நினைக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை ஓரளவு நன்றாகக் கட்டுப்படுத்தி சேசிங் செய்யக்கூடிய இலக்கைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன். இருப்பினும் கடைசியில் அது தவறிச் சென்றது” என்றார். 

இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு புறம் இருந்து ரசிக்கும் நாம், வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய, சொல்லப் போனால் முதல் முறை கோப்பை கனவுடன் இறுதிப் போட்டி வரை வந்த தென் ஆப்பிரிக்க அணி, தாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அணி, திடீரென ஏற்பட்ட தோல்வியின் சோகத்தால், மனமுடைந்ததைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம்! 

அதனை உணர்ந்து தான், இந்திய அணியின் தீவிர ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி, உற்சாகப் படுத்தி, அவர்களின் சோகத்தை விரட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். இணையத்தில் வைரலான வீடியோ ஒன்று, இந்திய ரசிகர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தும் வீடியோவை சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து, விளையாட்டு என்பதன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவை எல்லாம் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் உலகத்துக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe