“என் அனுமதி இல்லாமல் ஒருவரும் என்னைப் புண்படுத்த முடியாது”: மகாத்மா காந்தி!

இந்தியா உரத்த சிந்தனை கட்டுரைகள் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
gandhiji sand art sudarsan patnaik - 2026
ஒடிஷா மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வரைந்த மணல் ஓவியங்கள்….

வாழ்க்கைக்கான வாசகம் இது. அதுவும் காந்திஜியின் வாசகம் இது!

நான் சில வருடங்களுக்கு முன் சென்னை செல்வதற்காக சேவாக்கிராம் ரெயில் நிலையம் சென்ற போது, காந்தியடிகளின் வாசகங்கள் அங்கு பல இடங்களில் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அந்த வாசகங்கள் படிப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தன.

அதில் குறிப்பாக “என்னுடைய அனுமதி இல்லாமல் ஒருவரும் என்னைப் புண்படுத்த முடியாது- மகாத்மா காந்தியடிகள்” என்ற வாசகம் என் மனதில் பதிந்தது. எத்தனை ஒரு மனமுதிர்ச்சியான வார்த்தைகள். இவ்வாறு தன் கருத்தை தெரிவிக்க அவர் தம் வாழ்வில் எத்தனை அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்!

“தன்னுடைய நடத்தையினாலேயே தமக்கு நன்மையோ, தீமையோ நிகழும்” – என உரைக்கும் ஒரு அருமையான வாசகம். இதனை ஒரு கட்டுரையாக எழுதினேன். ஆங்கில நாளிதழான ‘தி ஹித்வாத்’ -தில் பிரசுரமாகி இருந்தது.

காந்தியடிகளின் வாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. அதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு ‘காந்தியடிகளின் வாசகங்களை உள்ளூர் மொழியான மராட்டியில் எழுதினால் காந்தியடிகளின் செய்தி பலரை சென்றடையும்’ என்ற கோரிக்கையுடன் அந்தக் கட்டுரையை முடித்திருந்தேன்.

வருடங்கள் கழிந்தது. நாக்பூர் குடி பெயர்ந்தோம். எங்கள் தெருவில் தமிழ்க் குடும்ப உறுப்பினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த நவராத்திரியின் முதல் நாள், பக்கத்து வீட்டில் திருமதி மஹாலட்சுமி ஸ்ரீநிவாஸன் நவராத்திரிக்காக கொலு பொம்மைகளை அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தார். நானும் அவர்களுக்கு உதவி செய்தேன்.

englishpaper - 2026

அப்போது, ஒரு பொம்மையை சுற்றியிருந்த நாளிதழின் காகிதத்தைப் பிரித்த போது, ஒரு நிமிடம் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. “மாமி, இது நான் எழுதின காந்தியைப் பற்றிய கட்டுரை” என்று சந்தோஷத்தில் குரல் கொடுத்தேன்.

அந்த மாமியும் அதைப் பார்த்தவுடன் என்னை ஆரத் தழுவிக் கொண்டார். மாமியும் சென்ற வருடம் அவர்கள் வீட்டிற்கு நவராத்திரிக்கு வந்தவர்களிடம் அந்த கட்டுரையைக் காட்டி மகிழ்ந்தார்.

இன்று காந்தியடிகளின் 150 -வது பிறந்த நாளன்று காந்திஜியின் அந்த வாசகமும், செரிண்டிபிடி கணக்காக திடீரென கண்ணில் அகப்பட்ட பேப்பரும் இன்று நிழலாடியது.

வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்ற காந்தியடிகளின் இந்த வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு, நம் வாழ்வில் நடக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாமே காரணம் என்பதை உணர்வோம்! வாழ்க காந்தியடிகள்!! வாழ்க அவர் புகழ்!!

  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.