தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை! சுகாதார ஆய்வாளர் கைது!

Published:

vankodumai

கேரளத்தில், தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகி, சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சென்ற 19 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதன் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாங்கோடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியது:

குளத்துப்புழையைச் சேர்ந்த 44 வயது பெண், மலப்புரத்தில் வீட்டு செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பிய அவரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் இளநிலை சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

அந்தப் பெண்ணுக்கு நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் முடிவு எதிர்மறையாக வந்தது. இது தொடர்பான சான்றிதழை பரதனூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளும்படி சுகாதார ஆய்வாளர் கூறியதன் பேரில், கடந்த 3 ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றார் அந்தப் பெண்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அப்போது தன்னைக் கட்டிவைத்து சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடுத்த நாள் தன்னை விடுவித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்தப் பெண்.

இதைத் தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் நிலைய அதிகாரி கூறினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில சுகாதாரத் துறை செயலருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டு சம்பவங்களாலும் மாநிலத்துக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img