வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஜோடி!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
gold medal
gold medal

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் ஜோடி தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். அதேவேளையில் தீபிகா குமாரி அணிகள் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினார்.

கவுதமாலாவில் நடைபெற்ற உலகக் கோப்பை முதற்கட்ட தொடரில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தங்கம் வென்றுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ், அங்கிதா பகத் ஜோடி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் மெக்கன்ஸிஸி பிரவுனை எதிர்த்து விளையாடினார். இருவரும் தலா 9 புள்ளிகளை சேர்த்ததால் டிரா ஆனது.

இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை போட்டியில் தீபிகா குமாரி தங்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

ஆடவருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரியின் கணவரான அட்டானு தாஸ் இறுதிச் சுற்றில் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் காஸ்ட்ரோவை வீழ்த்தி தங்கம் வென்றார். உலகக் கோப்பை தொடரில் அட்டானு தாஸ் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

மேலும் ரீகர்வ் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியா 2009ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பதக்கம் வென்றுள்ளது. அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் தனிநபர் பிரிவில் 2 தங்கம் மற்றும் அணிகள் பிரிவில் ஒரு தங்கம் இந்தியா வெல்வதும் இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.