கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்

இந்தியா சற்றுமுன் தமிழகம் வணிகம்

புதுதில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சிபிஐ கோரியபடி, மேலும் 3 நாட்கள் அவருக்கு சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இன்றுடன் சி.பி.ஐ., காவல் முடித்து நீதிமன்றத்தில் கார்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். இவர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும், இவரிடம் மேலும் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்றும் சி.பி.ஐ., இன்று நீதிமன்றத்தில் கோரியது. அதனை ஏற்று, மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ நீதிமன்றக் காவல் அளித்தது. முன்னதாக, ஒரு நாள், தொடர்ந்து 5 நாட்கள் என்று விசாரணைக்கு சிபிஐ காவல் அளித்தது. ஆனால், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். எனவே தொடர்ந்து 3 நாட்கள் மேலும் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இன்னொரு வழக்காக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடு பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்திக்கு அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பி இருந்தது. இவ்வாறு சம்மன் அனுப்ப, அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என, உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது . முன்ஜாமினும் அளிக்க முடியாது என்று நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியது. இதனால் சிபிஐ மட்டுமல்லாம, அமலாக்கத்துறையின் பிடியும் கார்த்தி சிதம்பரம் மீது மேலும் இறுகுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.