பூ..ன்னும் சொல்லலாம், புய்ப்பம்ன்னும் சொல்லலாம்… நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்! வாரியமா? ஸ்கீமா? யு.பி.சிங் அளித்த பதில்!

Published:

cauvery issue upendra pratab singh - 2026

புது தில்லி: தமிழகம் சொல்வது போல் வாரியமா அல்லது கர்நாடகம் சொல்வது போல் திட்டமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறைச் செயலர் யு.பி.சிங், அட… பெயரில் என்ன இருக்கிறது…. காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் சரி, ஸ்கீம் என்றாலும் சரி, எல்லாமே ஏதோ ஒரு பெயர்தான். வரும் மே 3 ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முக்கியம். அதைச் செய்வோம் என்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில், நீர் நிலைகளைத் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான இரு வார நிகழ்வு தில்லியில் நிறைவடைந்தது. அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து விளக்குவதற்காக, தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சத்யபால் சிங், மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் குழுவும் கலந்து கொண்டது. குறிப்பாக, தமிழக பிரச்னை, காவிரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து தமிழக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதிலளித்தார் யு.பி.சிங்.

அப்போது அவர், “மே 3 ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரைவு திட்டத்தை மத்திய அமைச்சரவையில் அளித்து ஒப்புதல் பெற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்துள்ளதாகக் கூறியுள்ளது. எனவே அதன்படி செய்யப்படும்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

cauvery 1 - 2026

மேலாண்மை வாரியமா, ஸ்கீமா என்பது குறித்து பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் முடிவு செய்ய இயலாது. தமிழகமும், புதுச்சேரியும் இதனை காவிரி மேலாண்மை வாரியம் என்கின்றன. கர்நாடகம் ‘ஸ்கீம்’ என்றே கூறுகிறது. காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் அமைப்பின் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. அதில் பிரச்சினை இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழகம் அழைப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். காவிரி நீர் திறப்பு தொடர்பான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதுதான் தற்போது முக்கியமான அம்சம். இது குறித்துதான் தற்போது பரிசீலித்து வருகிறோம்” என்றார்.

தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் மத்திய அரசுக்குத்தான் உத்தரவிட்டோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினாரே! அப்படி இருக்க ஏன் மாநிலங்களிடம் இந்தத் தீர்ப்பு குறித்து விவாதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.

அதற்கு அவர், உச்ச நீதிமன்றம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட பின்னர், மத்திய அரசு தன்னிச்சையாக அதனை செய்திருக்கலாமே என்று கேட்கின்றீர்கள். மத்திய அரசு ஏன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களையும் அழைத்து, கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்டு, கருத்தொருமிப்பு ஏற்பட முயன்றது என்றால், மத்திய அரசு இந்தப் பிரச்னையை கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களின் சுதந்திரத்திலும் மதிப்பளித்து கருத்து கேட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

cauvery1 - 2026

நாளையே காவிரி மேலாண்மை வாரியம் அல்லது வேறு ஒரு பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும், அந்த அமைப்பு எடுக்கும் முடிவுக்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவை. எனவே தான் 4 மாநிலங்களிடமும் அவரவர் தரப்பு விளக்கம், ஆலோசனைகள் கேட்கப்பட்டன. காவிரி விவகாரத்தை அந்தந்த மாநிலங்கள் அவற்றின் நோக்கில் அணுகுகின்றன. ஆனால் மத்திய அரசு இதனை கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அணுகுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சரியானதொரு அமைப்பை உருவாக்கவே மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. பின்னாளில் எவருக்கும் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாத அளவில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய விஷயம் இது” என்றார் யு.பி.சிங்.

வரைவு செயல்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் இறுதி முடிவு எடுக்க எத்தனை நாட்களாகும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு யு.பி.சிங், வரைவு செயல்திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு பிறகு அந்த அமைப்பு இறுதி வடிவம் எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பதை இப்போது நாங்கள் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அந்த வரைவு செயல் திட்டத்தின் மீது நீண்ட நாட்கள் விவாதம் எதுவும் நடைபெறாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு செயல் திட்டத்தில், ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விரும்பி உத்தரவிட்டால், அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப் படலாம். மாறாக, மத்திய அரசு கொடுக்கும் வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தால், அது உடனே அரசாணையாக அறிவிக்கப் பட்டு விடும் என்றார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

வரைவு செயல் திட்டத்துக்கு மேலும் கால அவகாசம் கோருவீர்களா என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே மத்திய அரசு செயல்படுகிறது. எனவே நீதிமன்றம் வரையறை செய்துள்ள காலக் கெடுவுக்குள் வரைவு செயல்திட்டம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்றார் யு.பி.சிங்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img