மும்பை: துருக்கியில் ஏற்பட்ட நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ70.10 என்ற அளவைத் தொட்டுள்ளது.
அமெரிக்காவுடனான பிரச்னை காரணமாக துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி அதிபர் தாயிப் எர்டகோன் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.
இன்று காலை 11 மணி அளவில், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.70.10 ஆக இருந்தது.
நேற்றைய வணிகநேர முடிவில் ரூ.69.91ஆக இருந்தது. இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 23 காசு மீண்டு, ரூ.69.68 ஆக இருந்தது. பின் மீண்டும் சரிந்து ரூ.70.10 என்ற இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.
வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரைப் பெருமளவில் வாங்கி வருவதும், டாலருக்கு எதிராக ஆசிய நாடுகளின் செலாவணிகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டுள்ளதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.