இது ‘சமாதி தியான’ புகழ் கடைபிடிக்கும் ‘கீதாசாரம்’: விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ்!

Published:

சென்னை:
தமிழக முன்னாள் முதல்வரும், இந்நாள் துணை முதல்வரும் ஆன ஓபிஎஸ்., இன்று தான் கடைபிடிக்கும் கீதா சாரத் தத்துவத்தை உதிர்த்திருக்கிறார்.

முதல்வர் பதவியை இழந்து ஓர் ஆண்டு ஆனது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப, ஓ.பன்னீர்செல்வம் தத்துவ முத்தை உதிர்த்து ஒரு பதில் அளித்தார்.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். பின்னர், அவரை முதல்வர் ஆக அமர்த்திய சசிகலாவுக்கு தானே முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற பேராசை எழுந்ததால், அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு சசிகலா நெருக்குதல் கொடுத்ததால், ஓபிஎஸ்., இதனைப் பயன்படுத்தி, ஜெ. சமாதியில் தியானம் செய்து தர்மயுத்தத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. இப்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோத்து, துணை முதல்வராக இருந்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இருந்தாலும் அவ்வப்போது உரசல்கள், மரியாதைக் குறைவு என்று கூறி சுணங்குவது, ஓரங்கட்டுகிறார்கள் என்று ஆதரவாளர்கள் சொல்வது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்பியபடி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்தார் ஓபிஎஸ்., அப்போது அவர், அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் இயங்குவது குறித்த கேள்விக்கு, “அம்மா உணவகங்கள் லாப நோக்கத்துக்காக தொடங்கப்படவில்லை. அது ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என பதிலளித்தார்.

தொடர்ந்து “நீங்கள் முதல்வர் பதவியை இழந்து ஓராண்டு ஆகிறது. அது குறித்து வருத்தம் இருக்கிறதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ்., “இது ஒரு நல்ல கேள்வி, எதைக் கொண்டுவந்தோம் அதை நாம் இழப்பதற்கு?” என தத்துவார்த்த ரீதியாக பதிலளித்தபடி சென்றார்.

கீதையில் கண்ணன் கூறியதாக சொல்லப் படும் கீதாசார தத்துவம் இது. “எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு.. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்…” என்று நிலையாமைத் தத்துவத்தை விளக்குவது போல் கீதை உபதேசம் கூறப் பட்டிருக்கும். இதனை விரக்தி மனநிலையில் உள்ள ஒருவர், அல்லது உலகியலை வெறுத்து தன் மனநிலையை நலமாகப் பேணுபவர் கைக்கொள்ளும் உபதேசமாக இருக்கும். அதே மனநிலையில் ஓபிஎஸ்.ஸும் பதிலளித்திருக்கிறார். எனவே, இப்போதும் அவர் விரக்தியுற்ற மனநிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img