images 58 2 - 2026

சட்ட பிரிவு 8(3)-ஐ ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..

சற்றுமுன்
images 58 2 - 2026

வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3)-ஐ ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் 6 ஆண்டுகள் என மொத்த 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதைத் தொடர்ந்து, நேற்று ராகுலை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்து, மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தீர்ப்பு வெளியான அன்றைய தினம் முதல் அவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட உடனே எம்.பி.  எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களைவை செயலகம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில்,
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3)-ஐ ரத்து செய்ய வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.