சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம்: ஓபிஎஸ்

சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம். குடிசையில் வசிக்கும் மக்களை, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது.
கூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்களுக்காக பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று சட்டப்பேரவையில் திமுக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “சம்பள உயர்வு வழங்கும் குழுவின் பரிந்துரைகளை மிகக் குறுகிய காலத்தில் பெற்று 1-10-2017 அன்று முதல் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தி தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த சம்பள உயர்வினால் தமிழக அரசுக்கு ஒரே ஆண்டில் 14,719 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டாலும், அரசு ஊழியர்களின் நலன்கருதி அமல்படுத்தப்பட்டது.

2017-2018 ஆம் ஆண்டில் மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திற்காக மட்டும் அரசு செலவு செய்த தொகை 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய், அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதிய-மாகவும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வரிவருவாயில் சுமார் 70 சதவிகிதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

தமிழக அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக பெற்றுள்ள கடனுக்கான வட்டி செலவு 24%. மீதமுள்ள 6 % மாநில வரி வருவாயுடன் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரி பகிர்வு உள்பட 41,600 கோடி ரூபாயைக் கொண்டுதான் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உட்கட்டமைப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக வெளிச்சந்தையிலும் கடன்பெற்று, அத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டு வரும் சலுகைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. அரசின் வருவாயில் நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் நன்கு அறிவர்.

ஊதிய உயர்வு முரண்பாடுகளை சரிசெய்ய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள மொத்த அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர்கள் 7.42 லட்சம் பேர். மொத்தமாக உள்ள இந்த 19.42 லட்சம் குடும்பங்-களுக்கு, அரசின் வரிவருவாயில் செலவிடப்படும் தொகை 70%. தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்-களுக்கும் சேர்த்து மாநில அரசின் வரிவருவாயில் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடப்படும் தொகை 6% மட்டுமே.

சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கடமை. மாநில அரசின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை முன் நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது.

இடைநிலை ஆசிரியர்கள் 6-வது ஊதியக்குழுவின்படி 1-1-2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.17,800. 1-1-2016 சம்பள உயர்வுக்குப் பிறகு பெறும் மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.48,423. இந்த இடைப்பட்டக் காலத்தில் சராசரி சம்பள உயர்வு ரூ.30,623.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். 6-வது ஊதியக் குழுவின் மூலமாக 2006-ல் பெற்ற சம்பளம் ரூ.30,450. 7-வது ஊதியக் குழுவின் மூலமாக பெறும் சம்பளம் ரூ.63,638.

பட்டதாரி ஆசிரியர்கள் 2006-ல் அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.30,550. 7-வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வுக்கு முன் பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.63,683. 2016-ம் ஆண்டில் சம்பள உயர்வுக்கு பின்னால் சம்பளம் ரூ.83,085. வித்தியாசம் ரூ.52,535.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2006-ல் பெற்ற சம்பளம் ரூ30,750. சம்பள உயர்வுக்கு பிறகு மாதாந்திர ஊதியம் ரூ.83,635. சராசரி சம்பள உயர்வு 6-வது ஊதியத்திற்கும், 7-வது ஊதியத்திற்கும் வித்தியாசம் ரூ.52,885.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 6-வது ஊதியக்குழு மூலமாக பெற்ற சம்பளம் ரூ.36,950. 7-வது ஊதியக் குழுவிற்கு பின் உயர்த்தி தரப்பட்ட சம்பளம் ரூ.1,00,685. சராசரி அளவு ரூ.63,735.

தற்போது ஜாக்டோஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர் எழிலகம் வளாகத்தில் காவரையற்ற உண்ணாவிரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...