ஈசனின் திருவாயால், `அம்மையே’ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இக்கோயிலில் ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.
இன்று காலை 11 மணிக்கு பரமதத்தருக்கும் ஸ்ரீபுனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடும், இரவு ஸ்ரீபுனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச்சிபிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை அதிகாலை 3 மணிமுதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்தச் சமயத்தில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வண்ணம் மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையலும் இரவு 11 மணிக்கு அம்மையார் சித்திவிநாயகர் ஆலயத்துக்குச் செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும் 28-ம் தேதி காலை காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி விக்ராந்த் ராஜா மற்றும் அறங்காவலர் குழுவினர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனிகளை வாரி இறைக்கும் 27-ம் தேதி அனைவரும் பங்கேற்கும் வகையில் காரைக்கால் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.