நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்

Published:

21 June26 Nelliayapar ther - 2026தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

7-ம் திருநாளான நேற்று முன்தினம் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கிலும், அம்பாள் முத்து பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் வீதி உலா நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு சுவாமி நடராஜர் திருக்கோலத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலாவும், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இதற்காக நெல்லையப்பர் கோவிலில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வது சுவாமி தேர், அதன்பிறகு அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் வரும். ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related articles

Recent articles

spot_img