ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்தது வெறும் 9 ஆயிரம் ரூபாதானாம்… இதுக்குதான் இவ்வளவு அலப்பறையா?

சற்றுமுன் தமிழகம்

10 July02 Jayalalitha - 2026

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் என்ற பெருமையையும் சாதனையையும் படைத்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப் பட்டார். ஆனால் அதற்கு முன்னரே உடல் நலக் குறைவு ஏற்பட்டு சுமார் இரண்டரை மாதங்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் மக்களிடம் எழும் அளவுக்கு படுக்கையில் கிடந்து கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.

ஆயினும் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிச் சென்ற ஜெயலலிதாவின் மறைவு, அப்பலோ சிகிச்சை குறித்த சர்ச்சைகளைக் கிளப்பியதுடன், தொடரும் விசாரணைகள் அவர் மருத்துவமனையில் இருந்த போது பார்த்துச் சென்றவர்களின் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளையும் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அவரது சேமிப்புக் கணக்கில் வெறும் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமியிடம் குறுக்கு விசாரணை செய்த போது, ஜெயலலிதா வங்கிக் கணக்கில் 9,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா-வின் வங்கிக் கணக்கில் வெறும் 3 லட்சம் ரூபாயே உள்ளதாகவும் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்த 9 ஆயிரம் ரூபாய் மிச்சம் வைக்கத்தான் இத்தனை அலப்பறைகளா என்று மூக்கில் விரல் வைத்துள்ளனர் இந்தத் தகவலைக் கேட்ட பலர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.