சிகரெட் பிடித்த அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

KovilpattiUpdated Anna bus station - 2026

கோவில்பட்டியில் சிகரெட் பிடித்த அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. இதனால், 3மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது அந்த பஸ்சின் நடத்துனர் ரூபன் குமார் பஸ் நிலைய வளாகத்தில் சிகரெட் பிடித்துவிட்டு, அதனை அணைத்தார். அப்போது, அங்கே சீருடை இல்லாமல் இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் ஒரு காவலர் நடத்துனர் ரூபன் குமாரிடம் சிகரெட் பிடித்தது குறித்து கேட்டனர்.

அப்போது, அவர் நீங்கள் யார் என்று கேட்டதாகவும், அதற்கு சீருடை அணியாமல் இருந்த இருவரும், ”காவல்துறையை பார்த்து யார் என்றா கேட்கிறாய்?” என்று கூறி தகராறு செய்ததாகவும், தொடர்ந்து, ரூபன் குமாரை இருவரும் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் ரூபன் குமாருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட், செல்போன் ஆகியவற்றையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மற்ற அரசு பஸ் ஊழியர்கள் பஸ்கள் எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! மேலும் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் ஏற வந்த பயணிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு போக்குவரத்து வாகனங்கள் நின்றன. இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி முரளிரம்பா, கோட்டாட்சியர் அனிதா, டிஎஸ்பி ஜெபராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமின்றி வெளியூர் செல்லும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.