பிப்.5ம் தேதி முதல் தேமுதிக., சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கல்: விஜயகாந்த்

சற்றுமுன்

சென்னை:

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேமுதிக.,வில் வரும் பிப்.5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 5-2-2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

14-2-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.2,500-ம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

தே.மு.தி.க. மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கட்சித் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.