அம்மா இரங்கல் பாடல்: பாடிய வர்ஷன், எழுதிய அஸ்மின் ரசிகர்களுக்கு நன்றி

Published:

சென்னை:
அம்மா இரங்கல் பாடல் என்று வெளியான பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக, பாடலை இசையமைத்துப் பாடிய வர்ஷனும், எழுதிய அஸ்மினும் நன்றி  தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது…
தமிழக முதலமைச்சர் கடந்த 5-12-16ந் தேதி காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். 6-12-16ந் தேதி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்பின் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலை தளத்தில் வானே இடிந்ததம்மா..வாழ்வே முடிந்ததம்மா.. என்ற ‘அம்மா’ இரங்கல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த பாடலை திரு.இளையராஜா அவர்கள் பாடியிருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால், உண்மையிலேயே இந்தப் பாடலை பாடியது இசையமைப்பாளர் வர்ஷன். இவரது குரல் திரு.இளையராஜா அவர்களின் குரல் வளத்துடன் இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
‘அம்மா’ இரங்கல் பாடலை அஸ்மின் என்னும் பாடலாசிரியரின் வரிகளில், இசையமைப்பாளர் வர்ஷன் இசையமைத்து, பாடியுள்ளார்.
இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் அஸ்மின் கூறும்போது, ‘நான் இலங்கையில் ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டே திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறேன்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்ஆண்டனி அவர்கள் மூலம் ‘நான்’ படத்திற்காக பாடலாசிரியராக அறிமுகமாகும் வாய்ப்பைப்பெற்றேன். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை…’ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. துக்கம் தாங்காமல் கவிதை ஒன்றை முகநூலில் எழுதினேன். அதை எனது நண்பரும், ‘புறம்போக்கு’ படத்தின் இசையமைப்பாளருமான வர்ஷன் அவர்களிடம் சொன்னேன். அவர் இதையே ஒரு இரங்கல் பாடலாக உருவாக்கலாமே என்றார்.
அம்மாவின் நல்லடக்கம் நடைபெற்ற மாலை வேலையில் எனது எழுத்தில், வர்ஷினின் இசை மற்றும் குரலில் ‘அம்மா இரங்கல் பாடல்’ – ‘அம்மா..அம்மா… வானே இடிந்ததம்மா…வாழ்வே முடிந்ததம்மா..’பாடல் முழு வடிவம் பெற்றது.
அதை என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் நானும், இசையமைப்பாளர் வர்ஷன் அவர்களும் பகிர்ந்து கொண்டோம்.
அது அப்படியே வாட்ஸ்-அப், யூடியூப் மூலமும் வேகமாகப் பரவியது. அந்தப்பாடலைப் பாடிய வர்ஷனின் குரல் இசைஞானி இளையராஜா அவர்களின் குரலைப் போன்று இருப்பதாக நினைத்து பலரும் அதை அவர் பாடிய பாடல் என்றே செய்திகளை வெளியிட ஆரம்பித்தார்கள்.
எங்கள் இருவருக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அவர் இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் என்பதும் அந்த இசைமேதையை வாழ்நாளில் ஒரு தடவையாவது காண வேண்டும் ஆவலுடன் இருப்பவன் நான். அவருடைய பாடலாக ரசிகர்கள் அந்த பாடலை இதயத்தில் ஏற்றிவைத்திருப்பது எமக்குப்பெருமைதான்.
ஆனால் அந்த பாடல் இசைஞானியின் பாடலாகவே உலகம் எங்கும் பதிவாகியிருப்பதாக அதன் பின் என்னைத் தொடர்பு கொண்ட நண்பர்கள் தவறான தகவல் பரவுவதாக தெரிவித்தார்கள். சில பத்திரிகை நண்பர்களும் என்னையும், வர்ஷன் அவர்களையும் தொடர்பு கொண்டு எங்களைப் பற்றிய விவரங்களை வெளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
இருப்பினும் இன்னமும் சில ஊடகங்களில் ‘அம்மா இரங்கல் பாடல்’ இசைஞானி இளையராஜா அவர்கள் உருவாக்கிய பாடல் என்றே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
 இந்த சந்தர்ப்பத்தில் எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுத்து, ‘அம்மா இரங்கல் பாடல்’ உருவாக்கம் செய்த எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து எங்களைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’ என்றார்.
இசையமைப்பாளர் வர்ஷன் கூறும்போது, ‘நான் ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். என்னுடைய வாழ்நாளில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு முறை முயற்சித்தேன் ஆனால் நடக்க வில்லை. தற்போது அம்மா இரங்கல் பாடல் மூலம் பல கோடி மக்களின் இதயங்களுக்கு சென்றிருக்கிறேன் என்று நினைக்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது’ என்றார்.
ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img