ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

blue whale death madurai - 2026

மதுரை:

உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ப்ளூவேல் கேம் ஆன்லைன் விளையாட்டுக்கு மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வருட கல்லூரி மாணவர் ஒருவரும் பலியாகியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையைச் சேர்ந்த ஜெயமணி என்பவரின் இரண்டாவது மகன் விக்னேஷ் (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். அதில் தடை செய்யப்பட்ட ‘புளூ வேல்’ எனப்படும் நீல திமிங்கலம் விளையாட்டை விக்னேஷ் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது மாணவர் விக்னேஷ் தனது வலது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்திருந்தது தெரியவந்தது. அவர் தனது நோட்டு புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்ததும் தெரியவந்தது. நீல திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது என்றும் எழுதி வைத்திருந்தார் விக்னேஷ்.

எனவே, அவர் ப்ளூவேல் விளையாட்டை விளையாடியதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.