நாய் பண்ணையில் கிடைத்த நங்கையின் சடலம்! கொலைக்கான பின்னணி, கொலையாளி..

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
Screenshot_2020_0820_133702

திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் நாய் பண்ணையில் புதைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் பின்னணி என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் 35 வயதான பிரியங்கா தனது கணவர் சீனிவாசனை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியை அடுத்த வாணியமல்லி கிராமத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் காட்வின் டோமினிக் என்ற காடிபாய் (40) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தங்கை பிரியங்காவை காணவில்லை என செகந்திராபாத்தில் வசித்து வரும் அவரது அண்ணன் விக்ரம் (45) என்பவர் பாதிரிவேடு போலீசில் ஆன்லைனில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

இது பற்றி பாதிரிவேடு போலீசார் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து மாயமான அவரை தேடி வந்தனர்.

இது குறித்து வாணியமல்லி கிராமத்தில் உள்ள நாய் பண்ணைக்கு நேற்று போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர். அதில் இளம்பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்டு நாய் பண்ணையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

murder-2-1

இதையடுத்து தாசில்தார் கதிர்வேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நாய் பண்ணையில் புதைக்கப்பட்ட பிரியங்காவின் உடல் பொக்லைன் எந்திரம் கொண்டு தோண்டி எடுத்தனர். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

மேலும் அந்த நாய் பண்ணை அருகே தைலமர தோப்பில் இருக்கும் ஒரு தரைகிணற்றில் 2 கருப்பு பைகள் மிதந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பவுடர் மாதிரி ஒரு பொருள் இருந்தது. அது போதை பொருள் தானா? அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளா? என காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேரில் வந்து அந்த பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஆய்வுக்கு பிறகே மர்ம பொருளின் தன்மை பற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் கொலைக்கும் கிணற்றில் கிடந்த மர்ம பொருட்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் நாய் பண்ணையின் உரிமையாளர் காட்வின் டோமினிக் எங்கு சென்றார்?. அவரை தவிர இளம்பெண் பிரியங்காவுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 நபர்கள் யார்?. கொலைக்கான காரணம் மற்றும்் பின்னணி என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.