சென்னை: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தேனாம்பேட்டை திரு.வி.க., குடியிருப்பைச் சேர்ந்த ராஜா(32), மனைவி செண்பகவள்ளி(25) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ராஜா பெட்டிக் கடை நடத்தி வந்தார். செண்பகவள்ளி, தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில்,செண்பகவள்ளி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த, சென்னை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ், “செண்பகவள்ளியை அவரது கணவர் ராஜா, சந்தேகத்துடன் ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்தியால், மனமுடைந்த செண்பகவள்ளி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதற்கான சாட்சியங்கள், ஆவணங்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. கணவர் ராஜாவுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

