சென்னையில் சோகம்: பரங்கிமலை ரயில் நிலைய தடுப்புச் சுவரில் மோதி படிக்கட்டில் பயணித்த 7 பேர் உயிரிழப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

parangimalai railway station accident - 2026

சென்னை: சென்னையில் பெரும் சோக நிகழ்வாக, மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகள் 5 பேர், பரங்கிமலை ரயில் நிலைய கான்க்ரீட் தடுப்புச் சுவரில் மோதி அடுத்தடுத்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாம்பலம் கோடம்பாக்கம் இடையே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதை அடுத்து எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் திருமால்பூர் செல்லும் ரயிலும் இயக்கப்பட்டது.

வழக்கமாகச் செல்லும் வழித்தடத்தில் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயிலில் பயணிகள் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளனர். ஏற்கெனவே மின் கம்பி அறுந்து விழுந்ததால், வழக்கமான ரயில் தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்ட நிலையில், கிடைத்த ரயிலில் ஏறிச் செல்லும் அவசரத்தில் பயணிகள் முண்டியடித்து ரயில்களில் ஏறியுள்ளனர். வழக்கமாகவே செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பயணிகள் அதிகளவில் ஏறிச் செல்லும் திருமால்பூர் ரயிலில் இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் கூட்டம் அதிகரித்த நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பலர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் 3வது 4வது பிளாட்பாரத்துக்கு இடையில் எக்ஸ்ப்ரஸ் ரயில் வழித்தடத்தில் பிரிவுக்காகப் போடப்பட்டிருந்த கான்க்ரீட் சுவரில் மோதி கீழே விழுந்துள்ளர். இவ்வாறு 20க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்ததாகவும், அவர்களில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலரது நிலை கவலைக்கு இடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தை ரயில்வே ஐஜி வீரேந்திர குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே கூடுதல் டிஜிபி., சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது ஆபத்தானது என்றும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப் படும் என்றும் கூறினார். மேலும் அடிபட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. மேலும் உயிரிழப்பு குறித்து தகவல் தெரியவில்லை. இந்தச் சுவர் இப்போது எழுப்பப்  பட்டதல்ல, வெகு காலமாகவே உள்ளது. எனவே புதிதாக இந்த சுவரையோ, மின் கம்பிகளையோ அப்புறப் படுத்த முடியாது. பயணிகள்தான், ஓரளவுக்கு மேல் கூட்டம் இருந்தால், படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லக் கூடாது. ஒரு ரயிலில் கூட்டமாக இருந்தால் அடுத்த ரயிலில் செல்லலாம், அல்லது பஸ்சில் கூட செல்லலாம்… என்று கூறினார்.

முன்னதாக, நேற்றுதான் இதே பகுதியில் 2 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயிலில் தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியோர் நேற்று பயணம் செய்துள்ளனர். அந்த ரயில், பரங்கிமலை அருகே சென்றபோது விக்னேஷின் தோள் பை, சிக்னலில் திடீரென மாட்டிக் கொண்டு இழுத்ததில், விக்னேஷ் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். விக்னேஷைக் காப்பாற்ற முயன்ற ஸ்டீபனும் தவறி கீழே விழுந்ததில் அவர் மீது ரயில் ஏறி உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் திருமால்பூர் ரயிலில் சென்ற பயணிகள் 5 பேர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம், அந்த வழித் தடத்தில் செல்லும் பயணிகளிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, விபத்து நடந்த பாதை குறுகலாக உள்ளது என்றும், அந்தச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.