செப்பறை ‘தாமிரசபை’ அழகியகூத்தர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் நெல்லை

sepparai anither - 2026

நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடந்தது. சிவ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள்பாலித்தார்.

நெல்லை ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதியை ஒட்டி செப்பறை அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

4ஆம் தேதி அழகியகூத்தருக்கு திருவாதிரை அபிஷேகம் நடைபெற்றது. 5-ஆம்தேதி காலை 10 மணிக்கு அழகியகூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தியும், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் சுவாமி காட்சி அளித்தார்.

ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

காலை 11.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளிலும் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திங்கட்கிழமை இன்று முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு நடன தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.