ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எல்லா பொருள்களையும் ஆன்லைனில் வாங்குவது போல், உடல் நோய்க்கான மருத்துவத்துக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் பலர். இந்நிலையில், ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆன்லைனில் மருந்துகள் விற்கப் படுவதை தடை செய்யக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் குறிப்பிட்டு, மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு காலாவதியான,போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் கூறப்பட்டிருந்தது.
ஆன்லைலில் மருந்துகள் வாங்குவதாலும், விற்பதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து நேர்வதாகவும், அபாயகரமான சூழலை நோயாளி எதிர்கொள்வதாகவும், இது,சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்த நீதிபதி மகாதேவன், மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.