ருஷி வாக்கியம் (65) – பெண்களுக்கு சுதந்திரம் உள்ளதா?

Published:

rv3 - 2026
பாரதீய கலாச்சாரத்தில் பெண்களின் விஷயத்தில் மிகவும் பவித்திரமான கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.

ஆனால் பெண்களுக்குப் பல நியமங்களையும் நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள் என்ற எண்ணத்தோடு பலரும் பேசி வருகிறார்கள்.

பெண்களுக்கு இருக்கும் உடல் நிலைமை போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பிற்காக அவற்றை ஏற்படுத்தியுள்ளார்கள். கௌரவத்தில் மட்டும் எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை.

“ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர மர்ஹதி”
என்ற தர்ம சாஸ்திர வாக்கியத்தை எடுத்துக் கொண்டு அதன் முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்களை விலக்கிவிட்டு இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வெளியில் எடுத்து பெண்களுக்கு சுதந்திரம் இருக்கக்கூடாது என்று பாரத தேச தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று சிலர் தீய பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால் அதன் முன்னும் பின்னும் மகரிஷி என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

சாஸ்திரம் ஆண்களுக்கு ஒரு பொறுப்பை விதித்துள்ளது. பெண்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும். பெண்ணை சிறு வயதில் தாய் தந்தையர் பாதுகாக்க வேண்டும். திருமணத்துக்குப் பின் கணவன் பாதுகாக்க வேண்டும். வயதான பின் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும். இவை பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஆண்களின் பொறுப்பைக் கூறும் வார்த்தைகளே தவிர பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது என்று கூறுபவை அல்ல.

அதாவது பெண் தனக்குத்தானே கஷ்டப்பட வேண்டிய நிலைமை வரக்கூடாது. அவளுக்குச் சிறந்த போஷணை இருக்க வேண்டும். அவள் எதற்காகவும் தேடி அலைய வேண்டிய தேவையில்லாமல் அனைத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இங்கு ரட்சணை என்பது அவளுடைய நன்மை கருதி கூறப்பட்டதே தவிர அவளை வஞ்சிப்பதற்காக அல்ல.

இதற்கு மற்றுமொரு ஸ்பஷ்டமான தர்மசாஸ்திர வாக்கியம் காணப்படுகிறது. “உண்மையில் ஆண்கள் பெண்களை நிர்பந்தப்படுத்தி பாதுகாக்க இயலாது. அவளை அவளே பாதுகாத்துக் கொள்ளக் கூடியவள்” என்ற கருத்து இங்கு தென்படுகிறது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அதாவது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் பெண்களுக்கு உள்ளது. அது உடல் அளவில் உடற்பயிற்சி போன்றவற்றால் வந்த உடல் பலம் மற்றும் புத்தியால் வரும் ஆலோசனைகள், படிப்பறிவு போன்றவற்றின் பலம். இவை பெண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் பெண்கள் இருந்தாலும் கூட ஆண்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுவதில் பெண்களின் மதிப்பை இங்கு தெரியச் செய்வது மகரிஷியின் பிரதான உத்தேசம்.

அதுமட்டுமின்றி பெண்ணுக்குப் பல விஷயங்களிலும் சுதந்திரம் அளித்து அவற்றின் மேல் அதிகாரத்தையும் அவளுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அவை என்னவென்றால்,
“அர்த்தஸ்ய சங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்

சௌசே தர்மேன்ன பக்த்யாம்ச பாரிணாஹஸ்ய சேஷணே!!”

“சம்பாதித்த செல்வத்தை மனைவியின் அதிகாரத்தில் வை! செல்வத்தைக் காப்பதற்கும் செலவழிப்பதற்கும் அவளே அதிகாரி! வீட்டில் நல்ல பழக்கவழக்கங்கள், சுத்தம், சுகாதாரம், தர்மம், மற்றும் உணவு தயாரிப்பதிலும் அவளுக்கே பூரண அதிகாரம்” என்று மனு ஸ்மிருதி உபதேசிக்கிறது.

“அர்த்த சங்கிரகம், அர்த்த வ்யயம்” என்ற இரண்டையும் இங்கு குறிப்பிடுகிறார். அதாவது பணத்தை சேமிப்பதிலும் பணத்தை செலவழிப்பதிலும் அவளுக்கே முன்னுரிமை. அதாவது இல்லாளுக்கு இல்லத்தின் நிர்வாகத்தை அளிக்க வேண்டும். கணவன் சம்பாதித்து எடுத்து வரும் வருமானத்தை சேமிப்பதிலும் செலவழிப்பதிலும் பெண்ணுக்கே முதல் உரிமை.

அடுத்து சௌசம். அதாவது சமையல் சுத்தம், பாத்திர சுத்தம், உணவு சுத்தம் இம்மூன்றும் கூட பெண்களின் பொறுப்பாகக் கூறுகிறார். சுத்தம் சுகாதாரம் என்பது பெண்ணின் கைகளில் உள்ளது.
rv1 6 - 2026
நாகரீகத்தின் முக்கியமான சின்னம் சுத்தமும் சுகாதாரமும். நாகரிகமும் பண்பாடும் சுத்தம் சுகாதாரம் மூலம் வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட விஷயங்களில் பெண்களை சமர்த்தர்கள் என்று கூறி பெண்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

சுத்தம் சுகாதாரத்திற்கும் பவித்திரத்திற்கும் செல்வத்துக்கும் காரணமானவள் ஒரு பெண்ணான மகாலட்சுமியே! அதனால்தான் மகாலட்சுமி சொரூபமாக பெண்களைப் போற்றி சுத்தம் சுகாதாரம் இவற்றின் பொறுப்பை பெண்களுக்கு அளித்துள்ளார்கள் ரிஷிகள்.

சமையல் விஷயங்களிலும் அவளுக்கே சுதந்திரம். முக்கியமாக போஜனம் என்பது வீட்டிலுள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் மிகவும் தேவை. அனைவருக்கும் தேவையாக உள்ள பொறுப்பை பெண்ணின் கையில் ஒப்படைத்துள்ளார்கள். அவள் சமைத்த உணவை உண்டுதான் அவர்கள் ஏதாவது வேலை செய்ய முடியும். அதனால் சமையல் சுகாதாரம் செல்வம் இம்மூன்றின் மீதும் பெண்ணுக்கு முழு அதிகாரம் அளித்துள்ளார்கள்.

அதாவது வீடு தொடர்பான பிரதான செயல்கள் எவையோ அவற்றின் மேல் பெண்ணிற்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் “க்ருஹிணீ க்ருஹ முச்சதே” என்று பொதுவாக வழங்கும் வாக்கியத்தில் கூட, “இல்லாளே இல்லம்!” என்ற கருத்து நமக்கு புராதன காலத்திலிருந்தே உள்ளது.

“இயம் கேஹே லட்சுமி” என்கிறான் ராமச்சந்திர மூர்த்தி உத்தர ராமசரித நாடகத்தில்.

“வீட்டில் மகாலட்சுமியாக இருக்கிறாளல்லவா சீதாதேவி!” என்கிறான். பெண்களுக்கு மகாலட்சுமி ஸ்தானம் அளிக்கப்பட்டுள்ளது. மிக மிக பவித்திரமான பதவி இது .

அதனால் தாயாக அவளைப் பிள்ளைகள் கௌரவிக்க வேண்டும். மனைவியாக கணவன் கௌரவிக்க வேண்டும் என்பது இங்கு கூறப்பட்டுள்ள முக்கிய கருத்து. அக்காரணத்தால்தான் கணவன் மனைவி உறவில் மனைவிக்கு கணவன் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

சிலர் பெண்ணுக்கான தர்மங்கள் என்று பதிவிரதா தர்மம் போன்றவற்றைக் கூறுவார்கள். அதுபோன்ற தர்மங்களை பெண்களுக்கு எவ்வாறு கூறியுள்ளார்களோ, ஆண்களுக்கும் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

அதையும் மறக்கக்கூடாது. இவை பற்றி கூறும் போது அவை பற்றியும் பேச வேண்டும். இரண்டையும் நாம் கவனிக்கவேண்டும்.

நியமங்கள் அனைவருக்கும் தேவையே! ஏனென்றால் பிறக்கும்போதே எல்லோரும் ஸத்புருஷர்கள் அல்லர். பிறவியிலேயே மகாத்மாக்கள், ஸத்புருஷர்கள் யாரோ ஆயிரத்தில் ஒருவர் இருப்பர். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல சிந்தனைகள் தாமாகவே ஏற்படும். அவர்கள் தமக்குத் தாமே செல்ஃப் டிசிப்ளின் என்று சொல்லப்படும் தம்மைத்தாமே வரைமுறைப்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

ஆனால் அனைவராலும் அவ்வாறு தம்மைத்தாமே நெறிப்படுத்திக் கொள்ள இயலாது. எனவே தர்மசாஸ்திரத்தின் உதவியோடும் வீட்டில் பெரியவர்களின் அறிவுரையுடனும் நெறிமுறை நடக்க வேண்டும்.

அந்த வழிமுறை என்பது அங்கும் இங்கும் அலைந்து திரியும் புத்தியை கட்டுப்படுத்துவது மட்டுமே தவிர அதனை நிர்பந்தம் என்று நினைக்கக் கூடாது.

அது நம் பண்பாட்டின் ஒரு பகுதி. அதனால் யாரைப் பார்த்தாலும் அவர் பின்னாலேயே மனம் செல்லும்படியாக ஆணோ பெண்ணோ நடந்து கொள்ளக்கூடாது.

பெண்ணுக்கு பதிவிரதா தர்மம் போன்ற நியமங்கள் கூறப்பட்டுள்ளன. ஆணுக்கும் ஏகபத்தினி விரதம் போன்ற நியமங்கள் உள்ளன. அதாவது ஆண் ஒரு பெண்ணை மட்டுமே மனைவியாக நினைக்க வேண்டும். அதேபோல் பெண்ணும் ஒரு ஆணை மட்டுமே கணவனாகக் கருதவேண்டும். இவையே பதிவிரதா தர்மம் மற்றும்ஏக பத்தினி விரதம்.

இது மிக மிக உயர்ந்ததாக பாரத தேசத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் நியமங்கள். உலகம் போற்றும் பண்பாடு இது.

இவ்விதமாக பெண்கள் விஷயத்தில் மதிப்பையும் நெறிமுறையையும் கூறியுள்ள பாரதீய ருஷிகளுக்கு வந்தனம்!!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில் – ராஜி ரகுநாதன்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img