ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும் (பகுதி-5) |காலடி கும்பாபிஷேகம்

Published:

bharathi theerthar 2 - 2026

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும் பகுதி-5 
– மீ. விசுவநாதன்

காலடி கும்பாபிஷேகம்

ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்து மூன்றாவது பீடாதிபதிகளாகத் திகழ்ந்த மகான். ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் பிறந்த பூமி காலடி என்று கண்டு, காலடி பூமியில் பூர்ணா நதிக்கரையின் அருகில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும், ஸ்ரீ சாரதாம்பளுக்கும் கோவில் கட்டி 21.02.1910 அன்று துவாதசி சோமவார தினத்தில் விமர்சையாகக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார்கள். அந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகள் ( பூர்வாஸ்ரமத்தில் ஆர். கிருஷ்ணசாமி ஐயர், திருநெல்வேலி) “ஸ்ரீமத் ஆசார்யேந்த்ர வைபவம்” என்ற நூலில் விபரமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு பகுதியை இங்கே பதிவிடுகிறேன்:

“காலடி சமீபம் பெரும்பாவூர் என்ற ஊரில் தங்கியிருக்கும் சமயம் ராத்திரி ஸ்வப்னத்தில் (கனவில்) ஒரு விதந்து (விதவை) ஸ்ரீ ஸ்வாமிகளவர்கள் திருஷ்டியில் தோன்றி மந்தஹாசத்துடன்,”மரத்தடியிலேயே இருக்கிறேன். அழைப்பதற்காக வந்தேன்” என்று சொன்னதாகத் தெரிந்தது. இதன் தாத்பர்யம் விளங்கவில்லை.

மறுநாள் காலடியில் ஆலய நிர்மாணமாகி கும்பாபிஷேகத்திற்கு எல்லாம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்க ஏ. ராமச்சந்திர ஐயரும், ஸர்வாதிகாரி ஸ்ரீகண்ட சாஸ்த்ரிகளும் வந்தவுடன், காலடி சன்னிவேச விவரங்களை நன்கு அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதில், ஆலயத்திற்கு சமீபத்தில் ஓர் அசோக விருக்ஷமிருப்பதாகவும், அதன் பக்கம்தான் ஸ்ரீமத் சங்கரபகவத் பாதாச்சார்யருடைய தாயாரின் ஸம்ஸ்கார ஸ்தலமென்றும் கேட்டவுடன், தன்னை அழைக்க வந்தது அந்த மாதாவே என்று தீர்மானித்து பரவசராகிக் கண்களில் நீர் ததும்ப, சரீரம் நடுநடுங்க, பேசமுடியாமல் ஸ்தம்பித்து விட்டார்கள். பிறகு கனவில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்லி அனைவரையும் உற்சாகப் படுத்தினார்கள். மறுநாள் காலையில் காலடிக்கு விஜயம் செய்வதாகவும் உத்தரவு செய்தார்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
sringeri sri bharathi theerthar - 2026

மறுநாள் 11.02.1010 காலை எட்டு மணிக்கு காலடிக்கு விஜயம் செய்தார்கள். முதலில் மாதாவின் சம்ஸ்கார ஸ்தலத்தில் நமஸ்காராதிகளைச் செய்து விட்டு, பிறகு சாயங்காலமாய் கால் நடையாகப் புறப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக நிர்மாணம் செய்யப் பட்டிருந்த யாகசாலை, போஜனசாலை முதலிய ஏற்பாடுகளைப் பார்த்து சதோஷம் கொண்டார்கள்.

மாக சுக்ல பஞ்சமீ சோமவாரம் 14.02.1910 ஸ்ரீ சுவாமிகள் யாகசாலைக்கு விஜயமாகி சங்கல்பம் செய்வித்தார்கள். அன்றுமுதல் ஏழு நாள்கள் பிரதிஷ்டைக்கு அங்கமான கார்ய கலாபங்கள் நடந்தன. துவாதசி சோமவாரம் 21.02.1910 அன்று அபிஜித் முகூர்த்தத்தில் பிரதிஷ்டை யதாக்ரமாமாய் நடந்தது. ஸ்ரீ சுவாமிகள் ஆலயங்களுக்கு விஜயம் செய்து விசேஷமாக சாந்நித்யம் ஏற்படும்படி பூஜாதிகள் செய்து, கூடியிருந்த சிஷ்யர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் கொடுத்து அனுக்கிரகித்தார்கள்.

வந்திருந்த பக்தகோடிகள் அனைவருக்கும் அன்னதானம் செய்விக்கப் பட்டது. மாலையில் ஆசார்யாள் உபன்யாசம் செய்தார்கள். இனி பக்தர்கள் அனைவரும் இந்த காலடி புண்ய பூமிக்கு அடிக்கடி வந்து ஸ்ரீ ஆசார்யாளையும், ஸ்ரீ சாரதாம்பாளையும் தரிசனம் செய்யவேண்டும் என்று அனுக்கிரஹம் செய்தார்கள். இந்த ஆலய நிர்மாணத்தில் இரண்டு வருட காலமாய் உழைத்து குருபக்தியைக் காட்டிய திரு. ஏ. ராமச்சந்திர ஐயருக்கு “குருபக்த கேசரி” என்ற பட்டம் கொடுத்து அருள்செய்தார்கள்.

சிற்பி திரு. இ.ஆர். சுப்பராயரையும், மிக அழகாக ஸ்ரீ சங்கர கிரந்தாவளியை அச்சிட்டு அன்று சமர்ப்பணம் செய்த ஸ்ரீரங்கம் ஸ்ரீ வாணிவிலாஸ் அச்சக உரிமையாளர் திரு.டி.கே. பாலசுப்ரமணிய ஐயர் அவர்களைப் பாராட்டி அவர்களுக்கு “குருபக்த சிகாமணி” என்ற பட்டமும், பிரசாதமும் கொடுத்து அனுக்கிரகித்தார்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

( “ஸ்ரீமத் ஆசார்யேந்திர வைபவம்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது)

sri sachithananda shivanibhava narasimha bharathi swamigal - 2026
ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ஹ பாரதீ ஸ்வாமிகள்

“கல்யாணபுரி என்ற கல்லிடைக்குறிச்சியில் ஸ்ரீ சிருங்கேரி மடம்”

ஜகத்குரு அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் 1987ஆம் வருடம் விஜய யாத்திரையாக கல்லிடைக்குறிச்சி கிராமத்திற்கு விஜயம் செய்தார்கள். அந்த வருடம் ஸ்ரீ ஆசார்யாளின் வர்த்தந்தி (பிறந்த தினம்) உற்சவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு குருவின் அருளுக்குப் பாத்திரமானார்கள்.

அது சமயம் ஸ்ரீமான் கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயர் (கிட்டமணி ஐயர்) ஸ்ரீ ஆசார்யாளிடம் மிகுந்த பணிவோடும், பக்தியோடும்,” கல்லிடைக்குறிச்சியில் சிருங்கேரி மடம்” கட்டி, ஸ்ரீ ஆசார்யாள் வந்து கும்பாபிஷேகம் செய்தருள வேண்டும்” என்று வேணடிக் கொண்டார். “இன்னும் மடம் கட்ட வேண்டும். அதற்கு நாளாகுமே..” என்று ஆசார்யாள் சொன்னவுடன், ” நீங்கள் வந்து கும்பாபிஷேகம் செய்தருள வேண்டும். உடனேயே மடம் கட்டி விடுகிறோம். கட்டளை இடுங்கள் ” என்று திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயர் கேட்டுக் கொண்டவுடன் , குருநாதர் மிகுந்த மகிழ்ச்சியோடு,” சரி …அம்பாள் கிருபை நடக்கட்டும் என்று அனுக்கிரகம் செய்தார்.

குருவின் வாக்குக் கிடைத்து விட்டது. மடம் கட்ட இடம் வேண்டுமே? திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு (கிட்டமணி ஐயருக்கு) இராமச்சந்திரபுரத்தில் இருந்த தனது வீட்டை இடித்து ஸ்ரீ சங்கரமடம் அமைக்கும் பணியை மிகத் தீவிரமாகச் செய்தார். திரு. கிட்டாமணி ஐயரின் மனைவி திருமதி. அனந்தலக்ஷ்மி அம்மாள் (ஸ்ரீமதி ராஜம் அம்மாள்) அவர்களுக்கும் குருவிடம் அதிதீவிர பக்தி. மடத்தின் கட்டுமானப் பணியின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் குருநாதருக்குத் தெரிவித்து அவரின் வழிகாட்டுதலில் “சிருங்கேரி ஸ்ரீ சாரதா மடம்” மிக அழகாகக் கட்டி முடிக்கப் பட்டது. ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் பூஜை செய்து அனுக்கிரஹம் செய்த ஸ்ரீ சாரதாம்பாள் விக்ரஹம், ஸ்ரீ ஆதிசங்கரர் விக்ரஹம் 10.03.1988 அன்று ஸ்ரீ ஆசார்யாளின் திருக்கரங்களால் பிரதிர்ஷ்டையும் , ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. பின்பு குருநாதர் ஸ்ரீ சங்கரருக்கும், ஸ்ரீ சாரதாம்பாளுக்கும் பூஜைகள் செய்தார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

கும்பாபிஷேகம் முடிந்தவுடன், ஸ்ரீ ராமர் கோவிலின் முன்பாக அமைக்கப் பட்டிருந்த மேடையில் பக்தர்களுக்கு ஸ்ரீ ஆசார்யாள் அனுக்கிரஹ பாஷணம் செய்தார். அப்பொழுது கல்லிடைகுறிச்சி கிராமத்தில் பக்தர்களின் முழு ஒத்துழைப்போடு அமைக்கப் பட்ட சிருங்கேரி ஸ்ரீ சாரதா மடத்தை எண்ணித் தாம் மிகுந்த சந்தோஷம் அடைவதாகவும், ஊர் ஜனங்களின் பக்தி எப்போதும் குறையாமல் இருக்கட்டும் என்று ஆசிதந்தார்.

மேலும் இந்த மடம் இந்த ஊரில் இவ்வளவு விரைவாக அமைந்ததற்கு திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயர்(திரு. கிட்டாமணி ஐயர் அவர்கள்) அவர்களின் தீவிர பக்தியும் முக்கிய காரணம் என்றும், அவருக்கு “குருபக்த ரத்னம்” என்ற விருது கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறோம் என்றும் அருளினார்.

(வித்தையும் விநயமும் தொடரும் – 19.05.2020)

Related articles

Recent articles

spot_img