திருப்பதி வேங்கடாசலபதி, பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். அதோடு, பிறப்பு – இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே தெய்வம். புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சி.
திருப்பதி வேங்கடாசலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிவரங்கள்.
* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோவிலில் அதிகபட்ச எண்ணிக் கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இக்கோவிலில்தான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நிர்வாகத்தின்கீழ் வழங்கப்படும் தங்கும் விடுதிகளை அமைத்துள்ளதில் இது முதலிடத்தை வகிக்கிறது. இங்கு 7200 அறைகள், குடில்கள் மற்றும் சத்திரங்கள் இருக்கின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் தங்கலாம்.
தினமும்சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.லட்டு தயாரிப்புக்காக மற்றும் ஆலயப் பணிகளுக்காக மிக அதிக எண்ணிக்கையில் நெய்யைப் பயன்படுத்தும் கோயில் இது. வருடத்துக்கு 1,800 டன்கள். மிக அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தும் கோவிலும் இதுதான். ஒரு மாதத்துக்கு 2 கோடி யூனிட்டுகள். நாட்டிலேயே பெரிய அளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவும் பிரசாதமும் தயாரிக்கும் கோவில் இது. ஒரு மணி நேரத்திற்கு 2.2டன் நீராவி இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
* 30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோவில் நிர்வகித்து வருகிறது.
கணினித் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன் படுத்தும் முதல் கோயில் இதுதான். இக்கோவிலுக்கு என்று தனியாக ஒரு ‘கால் சென்டரே’ இருக்கிறது. தங்கும் வசதி, தரிசன டிக்கெட், உண்டியல், போக்குவரத்து ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வேங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி. நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது. அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 ல் நிறுவப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும அறக்கட்டளைகள்…
1. ஸ்ரீவேங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.
2. ஊனமுற்றோருக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை
இந்த மருத்துவ அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, பிறவி ஊனங்கள், முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
3. ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக் கட்டளை
இந்த அறக்கட்டளை, கோவில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.
4. ஸ்ரீ வேங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டு வருகிறது.
5. ஸ்ரீ வேங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.
6. பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
7. ஸ்ரீ வேங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.
8. ஸ்ரீ வேங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.