spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்தகாது செய்தவைகள் தகரவும்.. பிரிந்தவர் சேரவும்.. ஏகாதசி விரதம்!

தகாது செய்தவைகள் தகரவும்.. பிரிந்தவர் சேரவும்.. ஏகாதசி விரதம்!

- Advertisement -

மோகினி ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த விரதத்தால் மனிதன் நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டியதில்லை என்று நம்பப்படுகிறது. திரேதா யுகத்தில் விஷ்ணு கடல் கலக்கும் போது இந்த வடிவத்தை எடுத்தார் என்று நம்பப்படுகிறது, எனவே நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம்.

விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி’ என்ற பெயர் வந்தது. இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதிகம்.

பெருமாள் கோவிலில் வழிபாடு செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் பெருகும். அறியாமை நீங்கி நல்ல புத்தி உண்டாகும். இதன் மகிமையை ராமர் குலகுருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக புராணம் கூறுகிறது.

ஒரு நாள் வசிஷ்ட முனிவரை வணங்கிய ராமர், குருவே, அனைத்துப் பாவங்களையும் போக்கக் கூடிய ஒரு விரதத்தை எனக்குச் சொல்லுங்கள் எனக் கேட்டார்.

ராமா, மாதம் வளர்பிறையில் வரும் மோகினி ஏகாதசி, அறியாமையையும், பாவத்தையும் அடியோடு போக்கக்கூடியது. இதைப்போன்று வேறொரு விரதம் இல்லை. அதன் மகிமையைக் கூறுகிறேன் கேள்! என்று கூறி விவரித்தார் வசிஷ்டர்.

கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைகளையும் எடுத்துரைத்தார்.

சரஸ்வதி நதிக் கரையில் இருந்த பத்ராவதி நகரத்தை, சந்திர வம்சத்தைச் சேர்ந்த த்ருதிமான் என்ற மன்னன் ஆண்டு வந்தான், அந்த நகரில் தன பாலன் என்றொரு வியாபாரி இருந்தான். அவன் சிறந்த விஷ்ணு பக்தன், மனதாலும் யாருக்கும் தீங்கு நினைக்காதவன். அவனுக்கு சுமனஸ், த்யுதிமான், மேதாவி, சுக்ருதன், த்ருஷ்ட புத்தி என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.

இவர்களில் த்ருஷ்டபுத்தி, துஷ்ட குணம் கொண்டவன். எப்போதும் போதையில் இருப்பது, மாற்றான் மனைவியிடம் முறைகேடாக நடப்பது, தெய்வமே கிடையாது என்று வாதாடுவது, பக்தர்கள் மற்றும் பெரியவர்களை அவமானப்படுத்துவது போன்றவையே அவனது இயல்புகள்.

மகனது செயல்கள் தன பாலன் மனதை வருந்தச் செய்தது. எனவே, அவனை வீட்டை விட்டு விரட்டினார் தனபாலன். அப்பாடா…. இனி நம்மைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. இஷ்டம் போல் இருக்கலாம் என்று மனம் போனபடி வாழ ஆரம்பித்தான் த்ருஷ்ட புத்தி.

ஆனால், செலவுக்குப் பணம் வேண்டுமே! அதனால் திருடத் தொடங்கினான். களவாடிய செல்வத்தை தவறான செயல்களில் செலவழித்தான். அதனால், அவ்வப்போது காவலர்களிடம் சிக்கிக் கடும் தண்டனையும் அனுபவித்தான்.

ஆனாலும், அவன் திருந்துவதாக இல்லை. வினை விதைத்தவன் வினையை அனுபவித்துத்தானே ஆக வேண்டும். காலப்போக்கில், அவனது உடலில் பல நோய்கள் உண்டாகி, உயிர் வாழவே மிகவும் சிரமப்பட்டான்.

வியாதியால் துடித்த த்ருஷ்டபுத்தி, இப்பிறவியிலிருந்து விடுதலை கிடைக்காதா? என்று சுற்றித் திரிந்தான். போன ஜன்மத்தில் அவன் செய்த புண்ணியமோ என்னவோ? கங்கைக் கரையில் கவுண்டின்ய முனிவரது ஆசிரமத்தைக் கண்டு அடைந்தான்.

அப்போது, கவுண்டின்ய முனிவர் கங்கையில் குளித்து முடித்து, நீர் சொட்டச் சொட்ட கரையேறி வந்து கொண்டிருந்தார். அவரது உடலில் இருந்து ஒரு துளி கங்கை நீர், த்ருஷ்ட புத்தியின் மேல் விழுந்தது. அதன் பலனாக அவன் மனம் திருந்தினான்.

முனிவரின் கால்களில் விழுந்து, மாமுனியே, பிறருக்கு நல்லது நினைக்காமல், தீமைகள் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவன் நான். உங்களைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை. ஆகவே, நான் நற்கதி பெற வழி சொல்லுங்கள் எனக் கண்ணீர் சிந்தினான்.

கவுண்டின்யர், த்ருஷ்டபுத்தி… பாவம் செய்ய வழிகள் பல இருப்பதுபோல், அதிலிருந்து விடுபட்டு நற்கதி அடையவும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் தலைசிறந்தது மோகினி ஏகாதசி. அன்று நீ விரதம் இருந்து இறைவனை வழிபடுவதே நற்கதி நீ பெற நல்ல மார்க்கம்.

ஆகவே, மனம், மொழி, மெய் மூன்றாலும் மாதவனான மகாவிஷ்ணுவை வழிபடு. உனது பாவங்கள் எல்லாம் நீங்கும், நற்கதி கிடைக்கும் என்று கூறியதோடு, அந்த விரதம் இருக்க வேண்டிய வழிமுறைகளையும் அவனுக்குக் கூறினார். அதன்படியே செய்த த்ருஷ்டபுத்தி, செய்த பாவங்கள் நீங்கி வைகுண்டம் அடைந்தான்.
மோகினி ஏகாதசியின் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது.

பொதுவாகவே, ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பது ஐதிகம்.

கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்த நாளில் விரதமிருந்து, துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து, நாளை துவாதசி திதியன்று பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்துவர, பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,162FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,902FollowersFollow
17,200SubscribersSubscribe