திருநாவுக்கரசு நாயனார்[அப்பர்] சிவத் தலங்களை தரிசித்து திருப்பழனம்[திருவையாறு அருகில்] அடுத்துள்ள திங்களூர் வந்தார் . அங்கு திருநாவுக்கரசரை குருமூர்த்தமாக கொண்டு தனது மகன்கள் , சாலை, குளம், கிணறு, தண்ணீர்பந்தல் பாடசாலை என அனைத்திற்கும் அவருடைய பெயரை வைத்து அவரையே சதா நினைத்து பக்தி செய்து கொண்டிருந்தார் அப்பூதியார் அவர்கள் . அது கண்ட அப்பர் அங்கிருந்தவர்களிடம் கேட்டு அப்பூதியார் திருமாளிகை சென்றார் . அவரை தொழுத அப்பூதியாரிடம் நீர் அமைத்த அறச்சாலை முதலியவற்றிற்கு நும் பேர் வைக்காமல் வேறொரு பேர் வைத்தது ஏனோ?என்று வினவினார். அது கேட்ட அப்பூதியடிகள் சிவபெருமானின் திருவருள் முழுதும் பெற்ற எமது ஆண்ட அரசு திருநாவுக்கரசரின் பேர் வேறொரு பேரோ? நீர் உரைத்தது தவறு, அவரை அறியாதார்அவனியில் யாருளர்?நீர் யார்? என்று சிறிது கோபத்துடன் கேட்டார். இறைவரால் சூலை வலி தந்து சமண சமயத்தில் இருந்து வந்த அடியேன் திருநாவுக்கரசு நாமே என்று கூறினார். அதுகேட்ட அப்பூதியார் அளவில்லா ஆனந்தம் அடைந்து குடும்பத்துடன் வணங்கி அவரை தன மனையில் உணவு செய்யுமாறு வேண்ட அப்பரும் இசைந்தார். விருந்துக்கு வாழைஇலை பறித்து வர தனது மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை பணித்தார். சிறுவனும் மகிழ்ந்து தோட்டத்தில் வாழைக் குருத்தை அரியும் போது கொடியநாகம் தீண்டியது. தாயிடம் இலையைக் கொடுத்து விடம் தீண்டியதை கூறி வீழ்ந்து மாண்டான் . அதுகண்ட அப்பூதியடிகளும் அவர்தம் மனைவியாரும் அப்பர் அமுதுசெய்ய தடையாகுமே என்று மகனின் உடலை மறைத்து மலர்ந்த முகத்துடன் அப்பரை அழைத்து திருவடி விளக்கி அமுது செய்ய அழைத்தனர். திருநாவுக்கரசர் தமது உள்ளத்தில் திருவருளால் தடுமாற்றம் ஏற்பட மூத்த திருநாவுக்கரசு எங்கே?என்று வினவினார். அப்பூதியார் அவன் இப்போது இங்கு உதவான் என்றார் . உள்ளதை உரைப்பீர் என அப்பர் கேட்க , அப்பூதியார் நிகழ்ந்ததை உரைத்தார். நன்று செய்தீர்! இங்ஙனம் யார் செய்வார் என்று கருணை கூர்ந்து அப்பூதியின் மகனது சவத்தை திருக்கோயிலின் முன் கொணரச் செய்து, “ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே”. என்ற திருப்பதிகம் பாடினார் அப்பர் . ஈசன் திருவருளால் மைந்தன் உயிர் பெற்றான். பின் அப்பர் உணவு அருந்தி திருப்பழனம் சென்று அப்பூதியடிகளை சிறப்பித்துபதிகம் பாடியருளினார். என்னே அப்பூதியடிகளின் குரு பக்தி. சிவ பக்தி . நவக்கிரகங்ளில் சந்திரனுக்கு உகந்த கோவில் திங்களூர்ஆகும். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது. இக்கோவிலில் கைலாசநாதரும், பெரியநாயகி அம்மனும் வீற்றிருக்கின்றனர் [ஆலய தொடர்புக்கு:04362262499].
“அப்பூதியடிகள்” நாயனார் குருபூஜை : 23-1-15.
Published:

