3வது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வென்று இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பாண்ட்யா பேட்டிங் கைகொடுக்க இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

துவக்க வீரர்களாகக் களம் இறங்கிய வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. பாண்ட்யா வீசிய பந்தில் வார்னர் (42) போல்டானார். பின்ச், கேப்டன் ஸ்மித் இருவரும் சிறப்பாக விளையாடினர். இந்திய பந்துவீச்சை விளாசிய பின்ச், ஒரு நாள் அரங்கில் தனது 8வது சதத்தை எட்டினார். தன் பங்குக்கு ஸ்மித் அரை சதம் கடந்தார். அதன்பின்னர், குல்தீப் ‘சுழலில்’ பின்ச் (124), ஸ்மித் 63 ரன் என ஆட்டமிழக்க, விக்கெட் தொடர்ந்து சரிந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 293 ரன் எடுத்தது.

294 ரன் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். ரோகித் (71), ரகானே (70) ஆட்டமிழக்க, கேப்டன் கோலி(28), கேதார் ஜாதவ்(2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. பின் மணீஸ் பாண்டேவுடன் இணைந்த பாண்ட்யா அதிரடியில் கலக்க இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது. வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்த போது பாண்ட்யா 78 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.