தவறான முடி திருத்தும்: 2 கோடி இழப்பீடு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
hair cut
hair cut

புது தில்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் தவறான முடித் திருத்தம் செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தேசிய நுகா்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆஷ்யானா ராய் தொடுத்துள்ள வழக்கின் விவரம்:
கடந்த 2018-இல் மாடல் தேர்வுக்கு முடி திருத்தம் செய்வதற்காக தில்லியில் உள்ள சொகுசு ஹோட்டலில் உள்ள அழகு நிலையத்துக்குச் சென்று தனது நீண்ட கூந்தலை முடிவில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் வெட்டும்படி கூறினேன். ஆனால், எனது மொத்த முடியின் நீளத்தையே நான்கு அங்குலமாக்கி முடி திருத்துபவா் தவறாக வெட்டிவிட்டார்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையின் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததால், தலைமுடி சிகிச்சையை இலவசமாகச் செய்தனர். ஆனால் அதில் எனது தலைமுடிக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டதுடன் அரிப்பு பாதிப்பும் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நான் பார்த்து வந்த வேலையும் பறிபோனது. எனது மாடலாகும் கனவு சிதைந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட முடி திருத்தகம் ரூ.3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், ‘தனது முடியை அழகாக வைத்து கொள்வதற்காக அந்தப் பெண் பணத்தை செலவிட்டு விலை அதிகமான முடி திருத்தகத்துக்கு சென்றுள்ளார்.

முடி அவரது உணா்வுபூா்வமான விவகாரமாக இருந்துள்ளது. அவரது நீண்ட கூந்தலுக்காகவே அவா் முடி பராமரிப்பு விளம்பரத்தில் நடிக்க மாடலிங் செய்துள்ளார். மன உளைச்சலால் அவா் தனது பணியையும் இழந்துள்ளார். முடி இழப்பு அவரது லட்சியத்துக்கும் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவறான முடித் திருத்தம் செய்த காரணத்தால் அந்தக் கடை நிா்வாகம் இலவச முடி சிகிச்சை அளித்துள்ளது. ஆகையால், பாதிக்கப்பட்ட ஆஷ்யானா ராய்க்கு சம்பந்தப்பட்ட முடித் திருத்தகம் ரூ.2 கோடி இழப்பீட்டு தொகையை எட்டு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.