மோடி பேச தடை கோரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு திடீர் வழக்கு

Reporters Diary

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சியின் தலைமையிடமாக கருதப்படும் சிலிகான் வேல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளில் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் சில நாட்டு தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி, அதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்லும் மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்துப் பேசுகிறார். ஊழியர்களுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

வரும் 27-ம் தேதி கலிபோர்னியாவுக்கு வரும் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க இங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலிபோர்னியாவில் மோடி உரையாற்றவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இங்குள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு சார்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது வரவேற்பு, மோடியின் பேச்சு போன்றவை இங்கு மதமாற்றம் மற்றும் தேவையற்ற வன்முறைக்கு வித்திடும். எனவே, இங்குள்ள இந்திய-அமெரிக்க சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள மோடியின் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மூன்று அமைப்புகளுக்கு கலிபோர்னியா கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பஞ்சாப் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு காரணங்கள் தொடர்பாக இந்த அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.