பிரேமம் படத்தின் மூலம் புகழை எட்டியவர் சாய் பல்லவி. அவர் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓரளவுக்கு வசூல் படங்களில் நடித்து தயாரிப்பாளருக்கு கையைக் கடிக்காத ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை அடுத்து இவர், இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இது தொடர்பான முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வரும் ஜூனில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். மேலும் சிவகார்த்திகேயனின் 24 ஏஎம்ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரித் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சாய் பல்லவி, செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் என்.ஜி.கே. என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள கரு படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.