நாளை (மே 12) வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!

கல்வி சற்றுமுன் தமிழகம்

சென்னை:

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை நாளை வெளியிடப்படுகிறது. 9 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வு எழுதியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளில் 8,98,753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினர். மொத்தத்தில் 9,30,000 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15,660 பேர் தேர்வு எழுதினர்.

விடைத்தாள்கள் மதிப்பீடு முடிவடைந்து மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டதா என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு முடிவுகள் 3 நாட்களுக்கு முன்பாகவே தயார் நிலையில் உள்ள நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த முடிவுகளை மாணவர்கள் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வரும்17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.