பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை திடீர் ரத்து

இந்தியா சற்றுமுன் சென்னை

pranab mukherjee - 2026

சென்னை:
இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி வரும் 24ஆம் தேதி காஞ்சீபுரம் செல்வதாக இருந்தது. வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்வார் என்றும், பின் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடையே உரையாற்றுவார் என்றும் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக, சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் கோவில்களில் பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடுப் பணிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்ட்டன.

காஞ்சிபுரத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ள காரணத்தால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், நாளை ஊட்டி செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்கி, புதன் கிழமை காலை ஊட்டி தாவரவியல் பூங்காவுக்குச் சென்று பார்வையிடுகிறார். பின் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பி, தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.