டி.டி.வி. தினகரன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை: வரவேற்க கட்சியினர் மும்முரம்!

Published:

ttv dinakaran - 2026

புதுதில்லி:

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய தில்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் இன்று வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை தில்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் தில்லி தனி நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மூவரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திராவின் ஜாமீன் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ஜாமீன் தரக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்நிலையில் தனி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை ஏற்று, தனது தீர்ப்பை வழங்கினார். இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்ட நீதிபதி, தனது தீர்ப்பில் குறிப்பிட்டபோது,

தில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் பார்வையில், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது சதிச்செயல் நடைபெற்றது என்ற அனுமானத்தை அளிக்கிறது. ஆனால் அனுமானங்களில் அடிப்படையில் சதிச்செயல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க முடியாது. வலுவானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தடயங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த குற்றச்செயல் நிரூபிக்கப்பட வேண்டும்.

மேலும் மனுதாரரை இனி எந்த வகையான காவலிலும் வைத்து விசாரிக்க தேவை இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவுகள் அடங்கிய குறுந்தகடு ஏற்கனவே போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தினகரனின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து இனி கைப்பற்ற வேண்டியது எதுவும் இல்லை.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

குற்றம் சாட்டப்பட்டவர் அ.தி.மு.க. கட்சி துணைப் பொதுச்செயலாளர். சமூகத்தில் மிகவும் ஆழமான வேர்களை உடையவர். மேலும் இந்த வழக்கில் லஞ்சம் அளிப்பதாக ஆசை காட்டப்பட்ட அல்லது லஞ்சம் பெறுவதாகக் கூறப்படும் நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கின் தகுதி குறித்து இப்போதைக்கு எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும் போது மனுதாரர் தினகரனுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை. எனவே, அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்… என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதே நிபந்தனைகளுடன் மல்லிகார்ஜூனாவும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை அடுத்து, தினகரன் திகார் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை இன்று விடுதலையாகி வெளிவருவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தான் வெளியே வரும்போது, தனக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்று தினகரன் விரும்பியதாகவும், அதனை செயல்படுத்த கட்சியினர் ஆயத்தமாகி வருவதாகவும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img