நிர்மலா சீதாராமன் மீது புகார் தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

இந்தியா சற்றுமுன்

புது தில்லி:

ராணுவத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. மேலும், ஜம்மு காஷ்மீர் சோபியான் பகுதி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது புகார் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிமணியன் சுவாமி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 27ஆம் தேதி சோபியான் மாவட்டம் கன்னவ்போரா பகுதியில் ராணுவத்தினர் ஒரு வாகனத்தில் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ராணுவத்தினர் இருந்த வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது.

இதை சமாளிக்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியாயினர், 9 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் படும் என மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராணுவத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ”சோபியான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அது குறித்து சட்டசபையில் பேசிய மாநில முதல்வர் மெகபூபா முப்தி, நிர்மலா சீதாராமனிடம் அனுமதி பெற்றுதான் ராணுவத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது குறித்து நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்”. என்று கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.