சித்தம் கலங்கிய சித்தராமையா; காலைவாரிய சாமுண்டீஸ்வரி! கைகொடுக்குமா பதாமி?

Published:

sidharamaiya in mysore chamundi temple - 2026

பெங்களூரு: என்ன நினைத்தாரோ தெரியாது, கர்நாடக மாநில முதல்வராகப் பதவியில் இருந்தும், தன் சொந்தத் தொகுதியாக இருந்தாலும், மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியை அடுத்து இன்னொரு தொகுதியிலும் போட்டியிடும் முடிவுக்கு வந்தார் சித்தராமையா. சாமுண்டீஸ்வரியுடன் கூட பதாமியிலும் போட்டியிட்டார்.

தென்கர்நாடகத்தின் சாமுண்டீஸ்வரி இப்போது அவரது காலை வாரிவிட்டது. வட கர்நாடகத்தின் பதாமி அவருக்குக் கை கொடுத்துள்ளது. ஆனாலும், 3700 வாக்குகள் வித்தியாசத்தில்தான் முன்னிலை பெற்று வருகிறார். மதியம் ஒரு மணி நிலவரப் படி, பதாமியில் அவர் 64022 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக.,வின் ஸ்ரீராமுலு 60335 வாக்குகள் பெற்றிருந்தார்.

சித்தராமையா பெரிதும் எதிர்பார்த்த தொகுதி சாமுண்டீஸ்வரி. ஆனால் அவர் அங்கே மஜத., வேட்பாளர் ஜிடி தேவேகௌடவை விட சுமார் 30 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியை சந்தித்திருக்கிறார்.

இதற்குக் காரணமாக, பாஜக.,வின் அரசியல் தந்திரம் கூறப் படுகிறது. மைசூர் பகுதியில் பாஜக.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்ற நிலையில், அங்கே மஜத., கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், காங்கிரஸ் தோல்வி அடைய வேண்டும் என்று நினைத்தும், பாஜக., தொகுதிக்கு பெரிதும் அறிமுகமில்லாத வேட்பாளர்களையே நிறுத்தியது. அதன்படி, மஜத., வேட்பாளர் 83662 வாக்குகள் பெற்றிருக்க 54370 வாக்குகளே சித்தராமையா பெற்றார். பாஜக., வேட்பாளர் 10105 வாக்குகள் பெற்றிருந்தார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

இதில் சுவாரஸ்யம், சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோல்வியில் தள்ளியவர், அவரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய ஜி.டி. தேவேகௌட.

gt deve gowda - 2026

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அவர் விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர். 1978ல் அரசியல் களத்தில் கால் வைத்தவர். 1983ல் சித்தராமையாவுடன் நட்பு கிடைத்தது. இந்த நட்பு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஜி.டி.தேவேகௌடா முதல் முறையாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஹுன்சூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1983ல் ஜனதா கட்சியில் இணைந்தார். ஆனால், 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க மைசூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உடையாருக்கு ஆதரவாக சித்தராமையா வேலை செய்தார். அவர் நினைத்தது போல் நடந்தது. அதிலிருந்து தங்கள் நட்பு கசந்ததாக ஜிடி.தேவேகௌட கூறியிருந்தார்.

சித்தராமையாவுடனான மோதலுக்குப் பின் 2007ல் பாஜக.,வில் இணைந்தார். பின்னர் 2013ல் மஜத.,வில் இணைந்தார். தொடர்ந்து, மைசூர் மாவட்டத்தில் மஜத.,வின் முக்கியத் தலைவராக வலம் வந்தார். சித்தராமையாவைப் பார்த்து எனக்கு பயம் இல்லை. என்னைப் பார்த்துதான் சித்தராமையாவுக்கு பயம் என்று தேர்தலுக்கு முன்பே தெரிவித்திருந்தார் ஜி.டி.தேவேகௌட. அது இன்று உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img