இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் வரும் அரசியல் விளம்பரங்களால் தேர்தல் பெறும் தாக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து கண்காணிக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவன பிரதிநிகள் தேர்தல் ஆணையக் குழுவை சந்தித்தனர். அப்போது கூகுளில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டு, அவை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்து உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அரசியல் விளம்பரங்களுக்கான செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஏற்கனவே தேர்தல் ஆணையக் குழு முகநூல் நிறுவன பிரதிநிதிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தியது. தேர்தலை முன்னிட்டு 48 மணி நேரம் தடை இருக்கும் நேரத்தில் தேர்தல் தொடர்பான செய்திகளை நீக்குவது தொடர்பாக தொழில் நுட்பத்தை உருவாக்குவதாக அப்போது முகநூல் நிறுவனம் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.