சீனியர் சினிமா மற்றும் சீரியல் நடிகை நாஞ்சில் நளினி மறைவு! நடிகர் சங்கம் இரங்கல்!

Published:

nanjilnalini - 2026

பழம்பெரும் சினிமா நடிகையும் அண்மைக் காலமாக சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவருமான நாஞ்சில் நளினி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி (வயது 74). சென்னை, வேளச்சேரியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இன்று அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது. நாஞ்சில் நளினிக்கு நடிகர் நடிகைகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

nanjilnalini1 - 2026

நாஞ்சில் நாடான நாகர்கோவிலைச் சேர்ந்த நளினி. தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து, பின்னர் சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தினார். அரசியில் கட்சிகளின் பிரச்சார நாடகங்கள் நடத்தினார். சிவாஜி நடித்த, ‛எங்க ஊர் ராஜா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அண்ணன் ஒரு கோவில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் உள்பட பல படங்களில் சிவாஜியுடன் நடித்தார். ரஜினியுடன் தர்மயுத்தம், ஆடுபுலி ஆட்டம் உள்பட பல படங்களில் நடித்தார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

பின்னாளில் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். மந்திரவாசல், பிருந்தாவனம், சூலம் போன்றவை அவர் நடித்த முக்கிய சீரியல்கள். மறைந்த நாஞ்சில் நளினிக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்.

நாஞ்சில் நளினியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்…

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை நாஞ்சில் நளினி அவர்கள் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்த நடிகைகளில் நாஞ்சில் நளினிக்கு முக்கிய இடம் உண்டு.

nanjil nalini - 2026

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை இவரது சொந்த ஊர். 12-ஆவது வயதில் நடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, திருநெல்வேலியிலுள்ள அமெச்சூர் நாடகக் குழு ஒன்றில் நடிக்கச் சேர்ந்தார். ‘நால்வர்’ என்னும் சமூக நாடகத்தில் 12-ஆவது வயதிலேயே 4 கதாநாயகர்களின் அம்மாவாக நடித்தவர். பின்னர் ‘வைரம்’ நாடக சபாவில் சேர்ந்து நடிப்பை விரிவுபடுத்திக் கொண்டார்.

சினிமாவில் பி.மாதவனின் இயக்கத்தில் 1969-இல் வெளிவந்த வெற்றிப்படமான ‘எங்க ஊர் ராஜா’ வில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். அதிலிருந்து சிவாஜிகணேசனின் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘தீர்ப்பு’ போன்றவை இவருக்கு நடிப்பை வெளிப்படுத்த அமைந்த படங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடகங்கள், சினிமா என்று வாழ்ந்து வந்த நேரத்தில் இவர் தனியாக ‘ரேவதி ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

பட வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் இவருக்கு மறு ஜென்மம் கொடுத்தது சின்னத்திரை. குட்டி பத்மினியின் ‘மந்திர வாசல்’ தொடர்தான் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் இவரை சரியாகக் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து நடிகர் மோகனின் ‘அச்சம் மடம் நாணம்’, ‘பிருந்தாவனம்’, ‘சூலம்’, போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.1978-இல் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். நாஞ்சில் நளினி அவர்களது இழப்பு நாடக மற்றும் திரைப்படத் துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு உற்றார் உறவினர் துக்கத்திலும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.” – என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

Related articles

Recent articles

spot_img