திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தற்கும் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக தோல்வி அடைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய வாக்குகள் கூட கிடைக்காத நிலையில், தேமுதிகவுக்கு என்று இருக்கும் வாக்கு வங்கியில் ஒரு சிறிதும் கூட கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பது, பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தே.மு.தி.க., உள்ளடி வேலை பார்த்ததால்தான், பா.ஜ.,விற்கு குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானதால், பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக இந்தத் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க., முடிவு செய்தது. தே.மு.தி.க., ஆதரவுடன், போட்டியிட பா.ஜ.க, விரும்பியது. இதனால், விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டார் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பிறகு பாஜக வேட்பாளரையும் அறிவித்தது. ஆனால், பா.ஜ.க,வுக்கு ஆதரவு அளிப்பதாக தே.மு.தி.க., அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனாலும், திருச்சி மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள், பா.ஜ.க, வுடன் இணைந்து தேர்தல் பணி செய்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் வெளியான தேர்தல் முடிவுகளில், பா.ஜ.க.,வுக்கு 5,015 வாக்குகளே கிடைத்தது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வுக்கு, 16 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்த நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில், பா.ஜ.க,வுக்கு, தே.மு.தி.க.,வின் ஆதரவு முழுமையாகக் கிடைக்காததால், குறைந்தளவு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம், தேமுதிக உள்ளடி வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

