சிலைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published:

சென்னை:

அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை சரியாகப் பராமரிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சிலைகளை சேதப் படுத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அடுத்து, பள்ளிக் குழந்தைகளுக்கும் மாணவ மாணவியருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்குவதில் முன்னுரிமை கொடுக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக., அதிகமான இடங்களில் வென்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிய சாதனையை கொண்டாடும் விதமாக, பாஜக.,வினர் ஆர்வக் கோளாறில் பிலோனியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 லட்சம் செலவில் வைக்கப்பட்ட லெனின் சிலையை அகற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் என பாஜக., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ வைரலாகப் பரவியது. இதனால் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. சிலை உடைப்புக்கு எதிர்க்குரல் எழும்ப, சிலை உடைப்புக்கு ஆதரவுக் கருத்துகளும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவின. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து பாஜக.,வினர் கருத்துக்களைப் பதிவுசெய்தனர். இதுஎரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், மேலும் ஒரு சமூகப் பதற்றத்தை அதிகரித்தது.

lenin statue 1 - 2026

இந்நிலையில் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது முகநூல் பதிவில், ‘லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று பதிவிட்டு, அது பலத்த விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பிய நிலையில், சமூகப் பதற்ற நிலையை உணர்ந்து, உடனே தன் பதிவை நீக்கியுள்ளார். இந்நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாகி வருகின்றன.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று இரவு பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் உள்ள அனைத்து ஈவேரா., பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளித்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img