2.0 வைணவர்களுக்கு ஒரு சிறப்பான படம்! எப்படி தெரியுமா?

Published:

rajini 2 0 - 2026

சமீபத்தில் வெளியான 2.0 படத்தைப் பார்த்த பல வைணவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இந்த படத்தில் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாசுரம் எடுத்தாளப்பட்டுள்ளதென்று. உண்மையிலேயே இது பெருமைப்படவேண்டிய விஷயம் தானா?

திருவாய்மொழி 6ம் பதில் 8ம் திருவாய்மொழி “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ” என்று தொடங்குகிறது. தன்னுடைய நிலமையை எம்பெருமானுக்கு எடுத்துச் சொல்ல பறவைகளை தூது விடுகின்ற பாசுரங்கள் கொண்ட பதிகம்.

ஒரு ஹிந்தி நடிகரை வைத்து அந்த வரிகளை உச்சரிக்க வைத்துள்ளனர். அவர் “பொன்னுலகாலீரோ புவன முழுதாலீரோ” என்கிறார். மேலே வரும் வரிகளையும் கொலை செய்திருக்கிறார். பாசுரத்தின் அர்த்தத்தையும் மாற்றி இஷ்டத்திற்கு விளக்கம் கூறுகிறார்.

ஆனால் இப்படத்தை பார்த்துவிட்டு நம்மாழ்வார் பாடல் இடம் பெற்றுள்ளது என்று நம்மவர்கள் பெருமையாய் பேசிக்கொள்கிறார்கள். இது உண்மையில் தமிழ் வளர்ப்பா அல்லது தமிழ்க்கொலையா என்று யோசிக்க வேண்டும்.

பறவைகளைப் பற்றி எத்தனையோ கவிஞர்கள் எத்தனையோ கவிதைகள் எழுதியுள்ளார்கள். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டிருக்கலாமே? ஏன் நம்மாழ்வார் பாசுரத்தை கொலை செய்ய வேண்டும்?

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

அதே படத்தில் “புள்ளினங்காள் புள்ளினங்காள் உன் தன் பேச்சரவம் கேட்டு நின்றேன்” என்று ஒரு பாடல். இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட இப்படியொரு பிழையான வரிகளை எழுத்தமாட்டான் என்பது உறுதி. “புள்ளினங்காள்” என்கிற விளிச்சொல் பன்மையில் உள்ள போது அடுத்த வரியில் “உன் தன்” என்று ஒருமையில் வருமா? அது சரி! “ஒவ்வொரு பூக்களுமே” என்கிற பிழையான வரிகள் கொண்ட பாடல் பல விருதுகள் வாங்கிய பூமி இது. கேட்டால் இதெல்லாம் கவிஞரின் சுதந்திரம் என்று சொல்லுவார்கள்.

இந்த பிழையான பாடலில் ஒட்டிக்கொண்டு இருந்த கொஞ்சம் உயிரையும் பாடியவர் வாங்கிவிட்டார். அவ்வளவு அழகான உச்சரிப்பு. “புள்ளினங்காள்” என்பதை “புல்லிங்கால்” என்று பாடுகிறார்.

ஒரு புல்லினத்தின் காலைப் பார்த்து பாடியுள்ளார் என்று தோன்றுகிறது. தமிழின் சிறப்பே “ழ, ள” போன்ற எழுத்துக்கள் தான். அந்த சிறப்பெழுத்துக்களை உச்சரிக்க தெரியாதவர்கள் இன்று சிறந்த பாடகர்கள். இன்றய ‘டுமில்’ போராளிகளுக்கு தமிழைப்பற்றி சிறிதேனும் தெரிந்திருந்தால் இதெற்கெல்லாம் கோவப் பட்டிருப்பார்கள். உண்மையாக தமிழை வளர்த்தவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவர்கள் வழி வந்தர்வர்களுமா அல்லது டுமிலர்களா?

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இன்றைய சினிமாவில் வரும் பாட்டும் கூத்தும் தமிழோடு சம்மந்தவற்றவை என்று நன்றாக தெரியும். புராதனமான தமிழ்க்கவிதைகளில் கைவைத்து அவைகளை களங்கப்படுத்துவதை தமிழ்த் திரையுலகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சினிமாவினால் தமிழ் முற்றிலுமாக அழியப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

நம்மவர்கள் இது போன்ற விஷயங்களை பெருமையாக நினைக்காமல் ஆழ்வாருக்குள்ள உண்மையான பெருமைகளைப் படித்தும் மற்றவர்க்கு எடுத்துரைத்தும் வாழ்தல் நலமாம்!

எழுத்து: எம்.ஏ.வி. மதுசூதனன்

Related articles

Recent articles

spot_img