இந்த சிலை அரசியலில் மட்டும் மாநில பேதம் இல்லை!

இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை கட்டுரைகள் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
senkottai park - 2026

செங்கோட்டை முத்துசாமிப் பூங்காவில் உள்ள காந்தி சிலையின் அடியில் காணப்படும் கல்வெட்டு தகவல்.

சிலையைத் திறந்து வைத்தவர் பட்டம் ஏ.தாணு பிள்ளை. திருவாங்கூர் முதல்வராக 1954ல் இருந்த போது திறந்து வைத்துள்ளார். அப்போது இவர் பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி என்ற பிஎஸ்பி கட்சியில் இணைந்து அதன் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ்காரர் என்றாலும், அப்போதைய குழப்ப நிலையில் பிஎஸ்பி கட்சித் தலைவராகி காங்கிரசுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்து, முதல்வராகியுள்ளார். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில், கேரளத்தில் சக்தியுடன் திகழ்ந்த பிஎஸ்பி கட்சி கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இவர் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கம்யூனிஸ்ட் அரசு அங்கே ஏற்பட்ட (விமோசன சமரம்) விடுதலைப் போராட்டத்தில் அடிவாங்கியதில், மீண்டும் பிஎஸ்பி-காங்கிரஸ் கூட்டணி அரசில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் தாணு பிள்ளை. அந்த 60-62ல் கேரள மாநில முதல்வராக இருந்தவர் முதுபெரும் கம்யூனிஸ்ட்டான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

பட்டம் ஏ.தாணு பிள்ளை. 85 வயது வாழ்ந்தவர். காங்கிரஸ்காரர். திருவனந்தபுரம் பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், பட்டம் எனும் பேர் இவர் பேரோடு ஒட்டிக் கொண்டது.

திருவனந்தபுரத்தில் நாயர் குடும்பத்தில் 1885ல் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர், கேரள அரசியலில் பீஷ்மாசார்யா என்று பேரெடுத்தவர். 1948ல் திருவாங்கூர் பிரதமராக இருந்தவர். பின்னரும் பஞ்சாப், ஆந்திர ஆளுநராகவும் இருந்துள்ளார்.

1954-55ல் திருவாங்கூர்-கொச்சின் முதல்வராக இவர் இருந்தபோது திறந்துவைக்கப்பட்ட இந்த காந்தி சிலையைப் பார்த்ததும் அவரைப் பற்றிய நினைவுகள்… ஏதோ சொல்லத் தோன்றியது!
6.6.54 ல் திறக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், எல்லாத் தகவலும் இங்கிலீஷில் இருந்தாலும், சிற்பி செங்கோட்டை ஆ.மாணிக்கம் ஆச்சாரி பெயர் மட்டும் தமிழில் தலைகாட்டுகிறது.

குறிப்பாக, காந்தி ஸ்டேசு என்ற வட்ட வடிவ எழுத்தின் கீழே காணப்படும் கலப்பை, சக்கரம் சின்னம் – கல்வெட்டுகளில் கட்சிச் சின்னத்தை அழுத்தமாகப் பதியவைப்பதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அந்தக் காலத்திலேயே காட்டியுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்த அரசியலில் மட்டும் மாநில பேதங்கள் ஏதுமில்லை!

-செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.