குறுக்கே வந்த நாய்; பிரேக் போட்ட இளைஞர்; லிப்ட் கேட்டுச் சென்ற பெண் பலி

உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர்: குறுக்கே திடீரென நாய் ஒன்று ஓடியதால், திடீரென பைக்கின் பிரேக்கைப் போட்ட இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவருடன் லிப்ட் கேட்டு ஏறிச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மும்முடிக்குப்பம் கீழாண்டை தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மனைவி தேவகி (45). இவர் நேற்று காலை மும்முடிக்குப்பத்தில் இருந்து வயலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் (23) என்பவர் பைக்கில் வயலூர் நோக்கிச் சென்றார். அவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறிக் கொண்டார் தேவகி. உச்சிமேடு காலனி அருகே பைக் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்து ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க, திடீர் ‘பிரேக்’ போட்டார் தனஞ்செழியன். இதனால் பைக் சறுக்கி விழுந்ததில் கீழே விழுந்த தேவகி, தனஞ்செழியன் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தேவகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனஞ்செழியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.