சென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
police award chennaipolice - 2026

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பெற்றுள்ளனர்.

‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது.

சென்னை சட்டம் ஒழுங்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கனவுத் திட்டமான ‘மூன்றாவது கண்’ திட்டத்தின் மூலம் சென்னையில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. முன்னர் வணிக வளாகங்கள், வங்கிகள், ஏடிஎம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சிசிடிவி காமிராக்கள் காணப்படும்.

தற்போது போலீஸாரின் ‘மூன்றாம் கண்’ விழிப்புணர்வு பிரசாரம் மூலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் சி.சி.டி.வி.யை பொருத்தி வருகின்றனர்.

சென்னையில் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு வியாபார நிறுவனங்கள், சமூக அக்கறையுள்ளவர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். குற்றம் நடப்பதை கண்டறிவது மட்டுமல்ல, குற்றச்செயல்களைத் தடுப்பதிலும் மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறது

இதன் அடுத்த கட்டமாக சென்னையில் 5 லட்சம் சிசிடிவி கேமராக்களை அமைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.

இந்தப் பணியை முன் வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை போட்டியிட்டது. இதே போன்று சென்னை போக்குவரத்து காவல்துறையில் பணமற்ற பரிவர்த்தனை முறையான இ-சலானை அறிமுகப் படுத்தியதன்மூலம் லஞ்சம், பணமுறைகேடு இல்லாத நிலை உருவானது.

தற்போது காவல்துறையினர் அபராதம் விதிக்க நவீன கருவிகள், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்கள், அதி நவீன போக்குவரத்து விதிமீறலை கண்காணித்து புகைப்படம் எடுக்கும் கேமராவை அமைத்தது போன்ற காரணங்களால் போக்குவரத்து காவல்துறையும் ஸ்கோச் விருதுக்கு போட்டியிட்டது.

இதை அடுத்து, இந்த ஆண்டு 2 விருதுகளை சென்னை சட்டம் ஓழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளது.

தில்லி அசோகா சாலையில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடமிருந்து சென்னை கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அருண் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.