ஆளுநருக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை:
எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ‘கெடு’ விதித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின். அவர்கள் ஒவ்வொருவரின் சார்பிலும் தனித் தனியே ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில், ஆளும் கட்சிக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது; அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 ஆகியவற்றுடன் தினகரன் தலைமையிலான போட்டி அதிமுகவின் 21 பேர் கொண்ட குழு ஆகியவை உள்ளன. இது, 119 என்பதால், ஆளும்கட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது; எனவே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் நிகழ்ந்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, அருணாசல பிரதேச வழக்கு ஆகியவற்றின் முன்னுதாரணத்தின்படி அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டிய இடம் சட்டமன்றம் என்பதால் ஆளுநர் ஒரு வார காலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், “இவ்விஷயத்தில் நான் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கும்” என்று கூறிய அவர், “114 பெரிதா, 119 பெரிதா? என்பதை முடிவு செய்து அதன்படி ஆளுநர் நடப்பார் என்று நம்புகிறேன். அவர் தற்போது தனது நிலைப்பாட்டில் சற்று மாறியிருப்பது போல் காணப்படுகிறது” என்று கூறினார் ஸ்டாலின்.

தாங்கள் கோரிய படி, ஆளுநர் முடிவு செய்யாவிட்டால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடப் போவதாக ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.