ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு விறு விறு

உள்ளூர் செய்திகள்

srirangam_temple ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் காலை வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரையில் வாக்குகள் பதிவு செய்யப்படும். மொத்தம் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுகள் இணையம் மூலம் ஒளிபரப்பப் படுகின்றன. வாக்குப் பதிவு குறித்த நிலவரத்தை அறிந்து கொள்ள 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 322 ஒட்டுச் சாவடிகளில் 79 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 29 பேர் களத்தில் உள்ளனர். தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1,2,3 என்ற வீதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டது. தொகுதியிலுள்ள 322 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 1,572 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொகுதியிலுள்ள 138 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் 41 மையங்களிலுள்ள 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாகப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தேர்தல் நிலவரங்களை அனுப்பும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு “டேப்லெட்’ கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் “வெப் கேமரா’ பொருத்தப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவை உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுகள் www.election.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.