பள்ளிக்குள் அரசியல் கூடாது- அரசு; தடைக்கு அரசியலே காரணம்- கமல்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரை:

இன்று புதிதாக அரசியல் கட்சி தொடங்க களத்தில் இறங்கியுள்ள கமலஹாசன், ராமேஸ்வரத்தில் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பயின்ற பள்ளியைப் பார்வையிட்டு, தனது அரசியல் பயணத்தைத் தொடங்க எண்ணினார். ஆனால், அவர் பள்ளிக்குள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதை அடுத்து, தான் பள்ளிக்குள் செல்லாமல், பள்ளி வாசலில் காரில் இருந்த படியே, பள்ளியைப் பார்வையிட்டார் கமல். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், தனது வருகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசியல்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ள கமல்ஹாசன், அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை காலை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்வதாக இருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை கமல் அந்தப் பள்ளிக்குள் வர தடை விதித்தது.
பள்ளிக்குள் அரசியல் நிகழ்வு கூடாது, அனுமதி அளிக்க இயலாது என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

முன்னதாக, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். அதில், நடிகர்கள், அரசியல்வாதிகள் தொடர்ச்சியாகப் பள்ளிகளை அரசியல் தலமாக மாற்றி வருகிறார்கள். வெவ்வேறு கருத்துடைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை மாணவர்களிடம் சொல்ல வருவதன் மூலம் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுவதுடன், அவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்பதால் இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கமலின் பள்ளி நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இதற்கு அரசியலே காரணம் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, அதிமுக அரசு பெரும் பொருட்செலவில் பள்ளி மாணவ மாணவியரை அழைத்துக் கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை நடத்தியது. ஆனால் இது போல், அரசின் கூட்டங்களுக்கு பள்ளி மாணவர்களை கட்டாயப் படுத்தி அழைத்துச் செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பள்ளி மாணவர்களை கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதையே நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், பள்ளிக்குள் எப்படி அரசியல் நிகழ்வுகளை குறிப்பாக, பள்ளி மாணவர்களிடம் அரசியல் ரீதியாக, பள்ளிக்குள் வைத்தே உரையாடும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அனுமதி கொடுப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கேள்வியாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.