காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: மத்திய அரசுக்கு கெடு விதித்த ஓ.பன்னீர்செல்வம்

Published:

tamilnadu budget pannerselvam - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு வரும் மார்ச் 29 ம் தேதி வரை கெடு விதித்து கருத்து கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்று கூறினார் திமுக., செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதால் மத்திய அரசு கவிழ்ந்து விடாது, ஆனாலும் மத்திய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்று சட்டப் பேரவையில் வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கை உள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தையும், காவிரி விவகாரத்தையும் ஒன்றாகக் கருத வேண்டாம். இவை இரண்டையும் இணைத்து எதிர்க் கட்சித் தலைவர் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று கூறினார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

தொடர்ந்து பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக., எம்பி.,க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் பதிலுக்காக வரும் 29ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்; நடவடிக்கை இல்லாவிட்டால் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று பேசினார் ஓ.பன்னீர்செல்வம். எனவே, வரும் 29 ஆம் தேதி வரை, அவர் மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் கெடு அளித்திருக்கிறார் எனப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img