மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ்

உள்ளூர் செய்திகள்

ramadoss சென்னை: மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவை தாமதப்படுத்தக் கூடாது என்று அறிக்கை ஒன்றில் பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அங்கு எந்நேரமும் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், இத்திட்டத்திற்கான தொடக்கவிழா தேதியை தமிழக அரசு இறுதி செய்யாததால் ரெயில் சேவை தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான தேதியை தீர்மானிக்கும்படி கடந்த அக்டோபர் மாதமே தமிழக அரசை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் இதுகுறித்து அரசுக்கு நினைவூட்டப்பட்டது. எனினும், இப்போதும் தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதல்வராக பதவியேற்ற பிறகு தான் திறப்பு விழா நடத்தப்படும் என்றும் தெரியவருகிறது. மக்களுக்காகத் தான் அரசு…. மக்கள் முதல்வருக்காக அல்ல… என்பதை உணர்ந்து கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை உட்பட தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.